Published : 12 Feb 2023 12:36 PM
Last Updated : 12 Feb 2023 12:36 PM

ஆளுநராக நியமனம் | தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன்: சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் 

கோப்புப்படம்

திருப்பூர்: ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை தனக்கு கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை என்றும் தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகப் பார்ப்பதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதில், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது: "தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ்மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.

பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழிகளில் ‌செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன்.

இதனை எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகவே பார்க்கிறேன், பிரதமர் மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்‌" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x