Last Updated : 20 May, 2017 09:23 AM

 

Published : 20 May 2017 09:23 AM
Last Updated : 20 May 2017 09:23 AM

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகரிப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 3 கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கும், பிறந்த சிசுக்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பிற இடங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழுநேரமும் பிரசவம் பார்த்தாலும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் அதிகமானோர் பிரசவத்துக்காக சேர்க்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரியோடு இணைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் மாதத்துக்கு சுமார் 500 பேருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதிகமானோ ருக்கு பிரசவம் பார்க்கப்படுவதால், அரசும் இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே சிப்காட்டில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் நட்டாவின் மனைவி சாந்தி (25) பிரசவத்துக்காக நேற்று ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பிரசவ அறைக்குள் சாந்திக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. சிறிது நேரத்தில் சாந்தியும் இறந்துவிட்டார். இதேபோல, சில தினங்களுக்கு முன்பு கீரனூர் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆராயி, அன்னவாசல் அருகே மழவராயன்பட்டியைச் சேர்ந்த போதும்பொண்ணு ஆகியோர் பிரசவத்தின்போது இறந்துள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மாவட்டத்தில் உள்ள இம்மருத்துவமனை பெண்களி டையே நன் மதிப்பை பெற்றுவந்த நிலையில், ஒரே வாரத்தில் 3 கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி கூறியதாவது: இந்த சம்பவத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே காரணம். இதுகுறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனையை நம்பியுள்ள ஏழை, எளிய பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ கூறும்போது, “மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இறப்பு குறித்து மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x