Published : 09 Feb 2023 04:19 AM
Last Updated : 09 Feb 2023 04:19 AM

பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் சார்பில் சென்னையில் ஒரு வார புகைப்பட கண்காட்சி - முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு வாரம் நடக்க உள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில், பல்வேறு பத்திரிகைகளின் புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இயற்கை சீற்றங்கள், முக்கிய சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் தாங்கள் துணிச்சலுடன், சிரமப்பட்டு எடுத்தசிறந்த புகைப்படங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் இவர்கள் காட்சிப்படுத்துகின்றனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்குதொடங்கி வைக்கிறார். விழாவில்,புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலையும் வெளியிடுகிறார். நிகழ்வுக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை வகிக்கிறார். ‘இந்து’ என்.ராம் முன்னிலை வகிக்கிறார்.

இக்கண்காட்சி நாளை தொடங்கி, பிப்.15-ம் தேதி வரை ஒருவார காலம் நடைபெறுகிறது. இதில்,தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்களின் தொகுப்பை ஒரே இடத்தில் காணலாம் என்பதால், புகைப்பட ஆர்வலர்கள் இதை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x