Published : 07 Feb 2023 11:18 AM
Last Updated : 07 Feb 2023 11:18 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ‘தாக்கம்’ ஏற்படுத்துமா மாநகராட்சி கவுன்சிலர்களின் செயல்பாடுகள்?

ஈரோடு மாநகராட்சி மேயர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்களின் கடந்த கால செயல்பாடுகள், இடைத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். தேமுதிக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு அதிமுக கவுன்சிலர்: ஈரோடு கிழக்கு தொகுதியில், மாநகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் இடம்பெற்றுள்ளன. ஈரோடு மேயராக சு.நாகரத்தினமும், துணை மேயராக செல்வராஜும் உள்ளனர். ஈரோடு கிழக்கில் இடம்பெற்றுள்ள 33 வார்டுகளில், 15-வது வார்டில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று ஹெமலதா கவுன்சிலராக தேர்வு பெற்றுள்ளார்.

மீதமுள்ள வார்டுகளில், திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, மாநகராட்சியின் செயல்பாடு, மாநகராட்சி கவுன்சிலர்களின் செயல்பாடு ஆகியவை இடைத்தேர்தலில் பெருமளவு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடைப்பணி, ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் தனியார் இணைய தள நிறுவன பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலர்களின் அதிருப்தி: இது தொடர்பாக, கடந்த காலங்களில் நடந்த மாநகராட்சி கூட்டங்களில் பேசிய கவுன்சிலர்கள், இப்பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, ‘வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது’ என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். தற்போது, வாக்கு சேகரிக்க செல்லும் அமைச்சர் முத்துசாமியிடம், இதுகுறித்து வாக்காளர்கள், கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்தச் சாலைகளை சீர்படுத்த ரூ 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒவ்வொரு இடத்திலும், சமாதானம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியின் காரணமாக, பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, சாலைகள் இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டும் வருகின்றன.

அதிகாரிகள் அலட்சியம்: மேலும், ‘மாநகராட்சியில் தூய்மைப் பணி சரிவர நடப்பதில்லை. குடிநீர், தெருவிளக்கு பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. இதையெல்லாம் விட, கவுன்சிலர்கள் போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதேயில்லை’ என்று ஆளுங்கட்சி உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளனர். இதனால், கவுன்சிலர்களுக்கும் - வாக்காளர்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

மேலும், பூங்கா ஆக்கிரமிப்பு, ஒரு நெம்பர் லாட்டரி விவகாரங்களில் சிக்கிய ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் செயல்பாடும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கவுன்சிலர்களின் செயல்பாடு, ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் உள்ளது.

வைரலாகும் வீடியோ பதிவு: ஈரோடு மாநகராட்சி 26-வது வார்டில் மதுக்கடையை அகற்றக் கோரி ஓராண்டாக கோரிக்கை வைத்தும், திமுக கவுன்சிலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாக்கு சேகரிக்கச் செல்லும் திமுகவினரை, அப்பகுதி மக்கள் மறித்து கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது வைரலாகி வருவது இதற்கு ஓர் உதாரணம்.

அதேபோல், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் இணைப்பு பெற்ற வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து தாமதமாகி வருவதும் வாக்காளர்களிடையே பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை ஓட்டம் என்ற பெயரில் நாட்களை கடத்துவதாக, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே குற்றச்சாட்டும் நிலை தொடர்கிறது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் வரி, குப்பைவரி மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவையும், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் முக்கிய பிரச்சார ஆயுதங்களாக மாறியுள்ளன. இவற்றை சமாளிக்கும் முயற்சியில் திமுக அமைச்சர்கள் படை தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது அதிருப்தியின் விளைவுகள் வெளிப்படையாகத் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x