Published : 06 Feb 2023 04:00 AM
Last Updated : 06 Feb 2023 04:00 AM

‘புருசெல்லா' நோய் பாதிப்பை தவிர்க்க பசு, எருமை கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுரை

பிரதிநிதித்துவப் படம்

கோவை: ‘புருசெல்லா' நோய் பாதிப்பை தவிர்க்க பசு, எருமை கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு பிரதான தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கால்நடைகளில் பல்வேறு நோய் தாக்கம் ஏற்பட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

நோயிலிருந்து கால்நடைகளை காத்திடும் முகமாக தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடைகளில் ஏற்படும் ‘புருசெல்லா' எனும் கன்றுவீச்சு நோய்க்கு தடுப்பூசி செலுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. நோய் பாதித்த கால்நடைகள் உணவு உட்கொள்ளாமலும், பால் உற்பத்தி குறைந்தும், சினை பிடிக்காமலும், கன்றுவீச்சு மற்றும் விரை வீக்கம் காணப்படும்.

எனவே, பொருளாதார இழப்பை தவிர்த்திடும் பொருட்டு நான்கில் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்நோயிலிருந்து காப்பாற்றுவதோடு இந்நோய் மனிதர்களுக்கு பரவுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

எனவே, தகுதியான கன்றுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

கோழிக்கழிச்சல் தடுப்பூசி: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 14-ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் தங்களது பகுதியில் நடைபெறும் தேதியை தங்களது அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களில் அறிந்து கொண்டு மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x