

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு: பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று சென்னை - ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முன்னதாக, அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை பத்தே கால் மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் சனிக்கிழமையும் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை. என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் பல முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம்.
அதன்பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம். உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பிரச்சினையுமில்லை. அவர் என் தாயைப் போல. நாங்கள் அம்மா - மகள் போல பழகுவோம்” என்று மலர்க்கொடி கூறியிருந்தார்.
வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’,‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’, ‘ஏபிசி நீ வாசி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் பாடல்களில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அண்மையில் அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.
பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணி ஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் மறைவு - பிரபலங்கள் புகழஞ்சலி: தமிழின் மகத்தான பின்னணி பாடகரான வாணி ஜெயராம் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.
“வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது மிகுந்த அதிர்ச்சிஅடைந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரிடம் பேசினேன். வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல மொழி பாடகர் அவர்” என்று பின்னணி பாடகர் சித்ரா குறிப்பிட்டுள்ளார்.
“பத்ம பூஷண் விருதுக்கு தகுதியுள்ள அற்புதமான பாடகர் வாணியம்மா. அவருடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளேன். ஒரு பெரிய விருது வாங்குவதற்கு முன் இப்படி நடந்துவிட்டது என்பதை தாங்க முடியவில்லை. நம்ப முடியாத செய்தி இது. அற்புதமான தேன் குரலுக்கு சொந்தக்காரர் அவர். என்ன சொல்வதென்றே தெரியவில்லை” என்று பின்னணி பாடகர் மனோ குறிப்பிட்டுள்ளார்.
“நாம் அனைவரும் உன்னதமான ஒருவரை இழந்துவிட்டோம். பல வருடங்களாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் இன்று நம்மை நொறுங்கச் செய்துவிட்டது. அவரின் இனிமையான, மென்மையான இயல்பு குரலில் பிரதிபலித்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
“பழம்பெரும் பாடகர் வாணி ஜெயராம் அம்மா இப்போது இல்லை என்ற கடினமான யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "மாலை" படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை சந்தித்து பாடலை பதிவு செய்தேன். அவர் இன்று இல்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது” என்று
இசையமைப்பாளர் டி.இமான் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இசை உலகுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய இழப்பு. அவர் தனது குரலின் மூலம் ஏராளமான பாடல்களை விட்டுச் சென்றுள்ளார்” என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் குறிப்பிட்டுள்ளார்.
“வாணி ஜெயராமன் அம்மாவின் மறைவுச் செய்தி கேட்டு மனவேதனையாக இருந்தது. அவரது மதிமயக்கும் குரலை மிஸ் செய்வேன். சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்க அவர் என்னை ஊக்குவித்ததை என்னால் மறக்க முடியாது” என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
“இடைத்தேர்தலில் இரட்டை இலை வென்றிட பாடுபடுவேன்” - ஓபிஎஸ்: "சச்சரவுக்குள்ளான பொதுக்குழுவின் மூலம், தேர்வு செய்யப்பட்ட இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வகிக்கின்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பற்றி கூறும்போது, "இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காத்த இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும் என்னோடு அதிமுக மீது பற்றுக் கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களும் வெற்றிபெற பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை அனைத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸிடம் தமிழக பாஜக வலியுறுத்தல்: "இபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கெனவே இரண்டுமுறை அங்கு எம்எல்ஏவாக இருந்தவர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு நம்முடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வாணியம்பாடி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் 1000-க்கு மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில், 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். மேலும் ,12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
“உங்கள் வேலையைப் பாருங்கள்...” அரவிந்த் கேஜ்ரிவால் காட்டம்: மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மத்திய அரசு ஏன் மோதிக்கொண்டே இருக்கிறது? அனைவருடனும் மோதிக்கொண்டிந்தால் நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியாது. நீங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள், மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள். மற்றவர்களின் வேலைகளில் தலையீடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் பாஜக தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளர், இணை பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘தமிழகத்துக்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு’: "தமிழ்நாட்டிற்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில் வளர்ச்சி என்பது தேச வளர்ச்சி. வேலை வாய்ப்பு வளர்ச்சியாகும். அதற்கு போடப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உணவுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் ஆப்கன் பெண்கள்: ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை கல்வி மற்றும் உயர் கல்வி கற்க ஆப்கன் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் துணை இன்றி பெண்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்குச் செல்லும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைத்து வருகிறது.
வயதான ஆண்கள், வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்களிலும், ஆண்களே இல்லாத குடும்பங்களிலும் பெண்களின் வருமானத்தைக் கொண்டே இதுவரை அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளதால், திருமணமாகாத பெண்கள், விதவைகள் உள்பட அதிக அளவிலான பெண்கள் உணவுக்கு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.