Published : 04 Feb 2023 02:13 PM
Last Updated : 04 Feb 2023 02:13 PM

உணவுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் ஆப்கன் பெண்கள்

ஆப்கன் பெண்கள் | கோப்புப் படம்

காபூல்: தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்ட தடை காரணமாக ஆப்கனைச் சேர்ந்த திருமணமாகாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை கல்வி மற்றும் உயர் கல்வி கற்க ஆப்கன் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் துணை இன்றி பெண்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்குச் செல்லும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைத்து வருகிறது.

வயதான ஆண்கள், வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்களிலும், ஆண்களே இல்லாத குடும்பங்களிலும் பெண்களின் வருமானத்தைக் கொண்டே இதுவரை அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளதால், திருமணமாகாத பெண்கள், விதவைகள் உள்பட அதிக அளவிலான பெண்கள் உணவுக்கு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முந்தைய ஆப்கன் அரசில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தியாகிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டவர்கள் என்பதால், அந்த உதவித் தொகையை தலிபான் அரசு நிறுத்திவிட்டது. இதன் காரணமாக, அரசின் உதவித் தொகையை பெற்று வந்த குடும்பங்கள் தற்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.

இதேபோல், நகராட்சி, மாநகராட்சி பணிகளில் முன்பு பணியில் இருந்த ஆண்கள் நீக்கப்பட்டு, அங்கு தலிபான்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனால், ஆண்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மாற்று வேலை கிடைக்காமல் பிச்சை எடுத்து குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கனில் கடந்த 2018-ல் 72 சதவீதம் மக்கள் ஏழ்மை நிலையில், அது தற்போது 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ல் பெண்கள் தலையிலான குடும்பங்கள் 1.7 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 4 சதவீதமாக உள்ளதாகவும் ஐநா உலக உணவு திட்டத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.

பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும் என்பது மனித குலத்தை உலுக்கும் மிகப் பெரிய கேள்விக்குரியாக மாறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x