Published : 04 Feb 2023 06:05 AM
Last Updated : 04 Feb 2023 06:05 AM

சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுரை

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலகப் பல்கலைக் கழக சேவை மையத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ம.செந்தில்குமார், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை: மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்றதமிழக என்எஸ்எஸ் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் கடந்த ஜன.26-ம்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (என்எஸ்எஸ்) 14 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி முகாம் டெல்லியில் கடந்த ஜன.17 முதல் 25 வரை நடைபெற்றது.

இந்நிலையில் அந்த மாணவர்களுடன் நேற்று, சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: குடியரசு தின அணிவகுப்பின்போது பெற்ற அனுபவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இது போன்ற நிகழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பலரும் அறிந்துகொள்ள முடியும்.

சுய ஒழுக்கத்துடனும், திறமைகளுடனும் இருப்பதால் மட்டுமே உங்களுக்கு இது போன்ற வாய்ப்புகிடைத்துள்ளது. மேலும் திறமைகளை வளர்த்து மேன்மேலும் பல சாதனைகளைப் படைத்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமைசேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ம.செந்தில்குமார், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x