Published : 03 Feb 2023 07:10 AM
Last Updated : 03 Feb 2023 07:10 AM

கனவுகளை அடையும் இலக்குக்கு தடையாக எந்த சக்தியும் இல்லை: என்சிசி மாணவர் பாராட்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி அறிவுரை

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் சென்னை கிண்டி, ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, நேற்று சந்தித்து வாழ்த்து பெற்று அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, அரசு அதிகாரிகள்.

சென்னை: உங்கள் கனவுகளை அடையும் இலக்குக்கு தடையாக உலகில் எந்த சக்தியும் இல்லை என்று என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த ஜன. 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், தேசிய மாணவர் படை (என்சிசி) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) படையினரும் கலந்து கொண்டனர். இந்த படைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நேற்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது: சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் ஜி20 அமைப்பின் தலைமையை ஏற்றுள்ள இந்த காலகட்டத்தில், குடியரசு தின அணிவகுப்பு உலகத்தையே திரும்பி பார்க்கச் செய்துள்ளது. என்சிசி மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அணிவகுப்பு மரியாதை பாராட்டுக்குரியது. என்எஸ்எஸ் மாணவர்கள் தங்களின் சிறப்பான பணிகள் மூலம் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமைதேடித் தந்துள்ளனர்.

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் குழு முயற்சிகள் வெற்றியை அளித்துள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா உலக நாடுகளில் முழுமையாக வளர்ந்த நாடாக இருக்கும். அத்துடன் உலக நாடுகளுக்கே வெளிச்சம் தரும் நாடாக விளங்கும். இன்று, பல்வேறு பிரச்சினைகளை இந்தியா எப்படி கையாள்கிறது என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. அத்துடன், சர்வதேச அளவில் இந்தியா பெருமை மிகுந்த நிலையில் உள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள இந்த பெருமைமிகு தருணத்தில், இளைஞர்களிடம் பெரும் பொறுப்பை நாடு சுமத்தியுள்ளது. முன்னோர்கள் அடைய முடியாத வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்டத்தை அவர்கள் பெற வேண்டும். எனவே இளைஞர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். கனவு சிறியதோ பெரியதோ, நீங்கள் உங்களது சிறப்பான முயற்சியின் மூலம் அடைய வேண்டும். உலகில் எந்த சக்தியும் உங்களின் இலக்கை அடைய தடையாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில், என்சிசி துணை இயக்குநர் ஜெனரல் அதுல்குமார் ரேஸ்தோகி, கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் என்எஸ்எஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி, ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி பாட்டீல், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், என்எஸ்எஸ் மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x