Published : 29 May 2017 08:56 AM
Last Updated : 29 May 2017 08:56 AM

உச்ச நீதிமன்றம்போல கட்டுப்பாடுகளோடு நாடாளுமன்றத்தையும் நடத்த வேண்டும்: எம்.பி.க்களுக்கு விருது வழங்கி கேரள ஆளுநர் பி.சதாசிவம் வேண்டுகோள்

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த உச்ச நீதிமன்றத்தைப் போல கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போதைய கேரள ஆளுநருமான பி.சதாசிவம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக சன்ஸத் ரத்னா விருதுகளை பிரைம் பாயின்ட் ஃபவுன்டேஷன் அமைப்பு வழங்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகள், கொண்டு வந்த தனிநபர் மசோதாக்கள், வருகைப் பதிவு, விவாதங்களில் பங்கேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறந்த எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

8-ம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 2016-ல் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒடிசா மாநில கட்டாக் தொகுதி எம்.பி. பார்துஹரி மக்தாப் (பிஜு ஜனதா தளம்), கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோருக்கு மக்களவை உறுப்பினர்களுக்கான சிறப்பு சன்ஸத் ரத்னா விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மாவல் தொகுதி எம்.பி. ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா), மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி தொகுதி எம்.பி. ராஜீவ் சங்கர்ராவ் சதவ் (காங்கிரஸ்), மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் தொகுதி எம்.பி. தனஞ்ஜெய் பீம்ராவ் மகாதிக் (தேசியவாத காங்கிரஸ்), மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் தொகுதி எம்.பி. ஹீனா விஜய்குமார் காவிட் (பாஜக) ஆகியோருக்கு மக்களவை உறுப்பினர்களுக்கான சன்ஸத் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

மாநிலங்களவை உறுப்பினர் களுக்கான விருதுகளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜய் ராவுத் (சிவசேனா), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.என்.பாலகோபால் (ஓய்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கேரள மாநிலத்தைச் சேர்ந்த டி.என்.சீமா (ஓய்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் பெற்றனர். விருதுகளை கேரள ஆளுநர் பி.சதாசிவம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், ஐஐடியின் ஐசிஎஸ்ஆர் பிரிவு முதல்வர் பி.கிருஷ்ணன், பிரைம் பாயின்ட் ஃபவுன்டேஷன் அமைப்பின் தலைவரும் பிரிசென்ஸ் இணைய இதழின் ஆசிரியருமான கே.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சதாசிவம் பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நீதித்துறையை விட அதிக பொறுப்பு உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் கூச்சல், அடிதடி நடக்கிறது. அவையில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் நேரலையாக பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால், நீதிபதிகள் ‘சாரி’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்வார்கள். உடனடியாக வழக்கறிஞர் இருக்கையில் அமர்ந்துவிடுவார். அதுபோல நாடாளுமன்றத்தையும் கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என்றார்.

இந்த விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக அரசியல், ஜனநாயகம், அரசாட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் அமைப்பின் தலைவர் எம்.ஆர்.மாதவன், இந்திய நாடாளுமன்றத்தை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார். பத்திரிகைத் துறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ‘விஷன் இந்தியா 2022’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நேஷனல் அக்ரோ ஃபவுன்டேஷனின் நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ்.ராஜசேகர், இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங், தமிழ்நாடு காவேரி டெல்டா விவசாயிகள் நலச் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘தமிழ்நாடு விஷன் 2022’ என்ற தலைப்பில் சத்யபாமா பல்கலைக்கழக இணைவேந்தர் மரிசீனா ஜான்சன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.நடராஜ் (அதிமுக), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (திமுக), பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x