Published : 30 Jan 2023 12:20 PM
Last Updated : 30 Jan 2023 12:20 PM

சென்னையில் பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை முறையாக செயல்படுத்துக: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: சென்னையில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யும் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் நாளிதழ் ஒன்று நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது.

சென்னையில் 20 இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பள்ளிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் குறைந்தது 3 இடங்களிலாவது பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பாமகவின் நீண்டகால குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்குழந்தைகள் மலர்களை விட மென்மையானவர்கள். பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத் தான் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினேன்.

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த சட்டத்தை, அவரது நினைவு நாளான இன்றிலிருந்தாவது கடுமையாக செயல்படுத்த வேண்டும்; குழந்தைகளைக் காக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x