Published : 29 Jan 2023 12:23 PM
Last Updated : 29 Jan 2023 12:23 PM

3 நாட்களே அவகாசம்: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்ப்பது எப்படி? 

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.

இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை அறிமுகம் செய்தது.

முதலில் டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.26 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x