Published : 21 Dec 2016 09:53 AM
Last Updated : 21 Dec 2016 09:53 AM

மழையும் இல்லை; நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது: கருகும் சம்பா பயிர்கள் - வறட்சி மாநிலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையும் இல்லை, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் உணவுத் தேவையில் மூன்றில் ஒரு பங்கைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் வராதது, பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த மாவட்டங்களில் நெல் சாகுபடி வெகுவாகக் குறைந்து வருகிறது.

தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், ஒருபோக சாகுபடியாக சம்பா சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டில் 8.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதிய தண்ணீர் இல்லாததால் நவம்பர் முதல் வாரத்திலேயே மேட்டூர் அணை மூடப்பட்டது. தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஒருசில வட்டாரங்களில் பயிர்களுக்கு விவசாயிகள் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை முற்றிலுமாக பொய்த்துப் போனதாலும், ஆறுகளில் நீர்வரத்து இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் இந்த மாவட்டங்களில் வெகுவாகக் குறைந்து விட்டது.

இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ‘தி இந்து’விடம் கூறியதாவது: காவிரியில் வந்த தண்ணீரை நம்பி இந்த ஆண்டு விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, நீர் இருப்பு இல்லை எனக்கூறி 3 மாதங்களுக்கு முன்பே மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டது.

மோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பா பயிர் சாகுபடி, தற்போது போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில் காய்ந்து, கருகி வருகின் றது. கடும் வறட்சி காரணமாக வயல்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் இருந்து 10 சதவீதம் கூட மகசூல் கிடைக்காது.

பயிர்கள் காய்ந்து வருவதைக் கண்டு மனமுடைந்து மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் ஏராளமான விவசாயிகள் மாண்டுள்ளனர். இதன் பிறகும்கூட மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில் மோட்டார் பம்புசெட்டில் இருந்து மிகக்குறைந்த அளவே வரும் தண்ணீர்.

கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவ தற்கான முயற்சிகளும், காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைப்பதிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் வருங்காலங்களில் விவசாயத்தை மேற்கொள்வது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை கருத்தில் கொண்டு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஒட்டங்காடு கிராமத்தில் தனது வயலில் காய்ந்துவரும் சம்பா நெற்பயிர்களைக் கவலையுடன் பார்க்கும் ஒரு விவசாயி.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில் மோட்டார் பம்புசெட்டில் இருந்து மிகக்குறைந்த அளவே வரும் தண்ணீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x