Published : 28 Jan 2023 07:50 AM
Last Updated : 28 Jan 2023 07:50 AM

வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட தமிழக தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்.

திருப்பூர்

திருப்பூரில் தமிழகத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழகத் தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியைத் தாக்கும் வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள், தந்தை பெரியார் திராவிடர்கழகத்தினர், கட்டிங் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் திரண்டு, வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து கோஷமெழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார், திலகர் நகரில் உள்ளபனியன் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை அவர் சமாதானப்படுத்தினார்.

தொடர்ந்து, தமிழகத் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தை தமிழகத்தொழிலாளர்கள் மற்றும் பல்வேறுஅமைப்பினர் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பூரில் புகை பிடிப்பது தொடர்பான பிரச்சினை, இருதரப்புக்கு இடையேயான தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x