பழநி கோயில் கும்பாபிஷேகம் முதல் பிபிசி ஆவணப்பட சர்ச்சை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.27, 2023

பழநி கோயில் கும்பாபிஷேகம் முதல் பிபிசி ஆவணப்பட சர்ச்சை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.27, 2023
Updated on
3 min read

16 ஆண்டுகளுக்குப் பிறகு பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது. முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள மலைக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருந்து மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

முன்னதாக, யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து காலை 8.15 மணிமுதல் 9.15 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மோடி குறித்த பிபிசி ஆவணப்படமும் தமிழகச் சூழலும்: பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த நிலையில் பிபிசி ஆவணப்படம் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பேசுபொருளானது.

"தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதித்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

"மாநில அரசு, பாஜக அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து, இத்தகைய தடைகளை விதிக்கிறதா? அல்லது அல்லது குஜராத் படுகொலைகள் மீண்டும் பேசுபொருளானால், நரேந்திர மோடி உள்ளிட்ட ஆட்சியாளர்களின் பக்கம் நின்று திமுக செய்த பச்சைத் துரோகம் அம்பலப்பட்டுவிடுமெனக் கருதிக்கொண்டு மூடி மறைக்க நினைக்கிறதா என்பது புரியவில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எங்களுடைய எதிர் தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதற்கிடையில் "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் 31-ம் தேதிதான் தொடங்குகிறது. எனவே, இன்னும் நாட்கள் இருக்கிறது. எனவே களத்தைப் பொறுத்தவரை அது எங்களுடையது. வெற்றி பெறுவது நாங்கள்தான்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையதிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு: கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு: சென்னை அண்ணா சாலையில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. கட்டிடத்தின் இடுபாடுகளுக்குள் சிக்கி சாலையில் நடந்து சென்ற பிரியா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் லேசான காயமடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் - பரீட்சையை பற்றி விவாதிப்போம்' நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளித்தார். அப்போது, காப்பியடித்தலால் ஏற்படும் பாதிப்புகள் முதல் கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியம் வரை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“நாட்டு நலனுக்காக நானும் ராகுலும் இணைந்துள்ளோம்”: “தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், நாட்டில் நிலவி வரும் சூழலை மாற்றும் அக்கறையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றேன்” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓமர், "இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தியின் மதிப்பையும் பிம்பத்தையும் உயர்த்துவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டின் தற்போது நிலவும் சூழலை மாற்றுவதற்காக நடத்தப்படுகிறது. எங்களின் தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல் நாட்டின் நலனுக்காகவே நாங்கள் இருவரும் இதில் ஒன்றிணைந்துள்ளோம்" என்றார்.

சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்: சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் விதிமீறல்களைச் சரிசெய்வதற்கான இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு வர பாகிஸ்தான் அரசுக்கு 90 நாட்களுக்கு வாய்ப்பளிப்பதேயாகும். இந்த நடைமுறை கடந்த 62 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் என்று இதுகுறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகக் கோப்பையை வெல்ல கங்குலி சொன்ன யோசனை: எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும், பயிற்சியாளர் ராகுல் திராவிடும் செய்ய வேண்டியது குறித்த தனது ஆலோசனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி பகிர்ந்துள்ளார்.

அதன்படி, “தற்போதைய அணி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இதை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் இந்த அணியை ஒருங்கே வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை தொடர் குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் போதும்” என கங்குலி சொல்லியுள்ளார்.

“இது ஆனந்தக் கண்ணீர்...” - சானியா மிர்சா உருக்கம்: நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய ஆட்டக்காரர்கள் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இணை தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், “இது தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடர்” என சொல்லி ஆனந்தக் கண்ணீர் சிந்தி மிகவும் உருக்கமாக சானியா பேசி இருந்தார்.

“நான் அழுதால் அது ஆனந்தத்தால் மட்டுமே. சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள். எனது 4 வயது மகன் முன்னிலையில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in