Published : 27 Jan 2023 04:02 PM
Last Updated : 27 Jan 2023 04:02 PM

“இது ஆனந்தக் கண்ணீர்...” - தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சானியா மிர்சா உருக்கம்

சானியா மிர்சா

மெல்பர்ன்: நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய ஆட்டக்காரர்கள் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இணையர் தோல்வியை தழுவி உள்ளனர். இந்நிலையில், “இது தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடர்” என சொல்லி ஆனந்தக் கண்ணீர் சிந்தி மிகவும் உருக்கமாக சானியா பேசி இருந்தார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2013-ல் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர். இப்படி பல சாதனைகளை படைத்து நாட்டுக்குப் பெருமை சேர்த்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் என்றும் அப்போது சொல்லியிருந்தார்.

“நான் அழுதால் அது ஆனந்தத்தால் மட்டுமே. சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள். நான் இன்னும் சில தொடர்களில் விளையாட உள்ளேன். எனது தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு பயணம் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2005-ல் தொடங்கியது. அப்போது எனக்கு 18 வயதுதான். மூன்றாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸுற்கு எதிராக விளையாடி இருந்தேன். இங்கு விளையாடியதில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்.

ராட் லேவர் களத்தில் எனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்வதில் மகிழ்ச்சி. எனது 4 வயது மகன் முன்னிலையில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனது பெற்றோர்களும் இங்கு உள்ளனர்” என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x