

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. கட்டிடத்தின் இடுபாடுகளுக்குள் சிக்கி சாலையில் நடந்து சென்ற பிரியா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் லேசான காயமடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் சாலை செல்லக்கூடிய வழியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தப் பணி நடைபெற்று வந்துள்ளது.
சென்னையின் பிரதான சாலை என்பதால், பணிக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், அரசுப் பேருந்துகள் என பலரும் அந்த சாலையில் பயணித்து வந்தனர்.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் கட்டிட இடுபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.