

மதிப்பு இழக்க செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் கேரள மாநிலம், கண்ணனூரில் உள்ள பிளைவுட் தயாரிப்பு தொழிற்கூடத்தில் காகித கூழாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இதற்கென 150 டன் பணத் தாள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் பணத் தாள்கள் நவம்பர் 8-ம் தேதி மதிப்பு இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து, செல்லத்தக்க பணத் தாள்களாக மாற்றிக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த பணத்தை வங்கிகளில் முதலீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகளில் கோடிக் கணக்கான மதிப்பில் 500, 1000 ரூபாய் பணத் தாள்கள் குவிந் தன. இவை அந்தந்த மாநிலங் களில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. இதன் மூலம் வங்கி களில் பழைய பணத் தாள்களை வைப்பதற்கான இட நெருக்கடி குறைந்தாலும், அவை ரிசர்வ் வங்கிகளில் மலைபோல் குவிந் திருந்தன.
கேரள மாநிலத்தில் திரு வனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத் தில் ரிசர்வ் வங்கியின் கிளைகள் செயல்படுகின்றன. இவற்றிலும் மதிப்பு இழக்கப்பட்ட பணத் தாள்கள் மலை போல் குவிந்தன.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், கண்ணனூரில் உள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு, பிளைவுட் தயாரிப்புப் பணிக்கான காகிதக் கூழ் பயன்பாட்டுக்கு இந்த பணத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. அந்நிறுவனத்தில் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பணத் தாள் களை காகிதக் கூழாக்கி பிளைவுட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேயின் முகமது கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில், பிளைவுட், ஹார்ட் போர்ட்ஸ், டைனிங் செட், கட்டில், எழுதும் அட்டை என பல பொருட்கள் தயாராகின்றன. அட்டை, மென் அட்டை, ஒட்டு பலகை தயாரிப்புக்கு காகிதக் கூழ் பயன்படுத்துவது வழக்கம். இப்போது காகிதக் கூழ் பயன் பாட்டுக்காக திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கியில் இருந்து, 150 டன் எடையுள்ள பணத் தாள்களை பெற்றுள்ளோம். ஒரு டன் ரூ.250 வீதம் விலைக்கு வாங்கியுள்ளோம்.
பணத் தாள்களை காகிதக் கூழாக்கி பைபர் போர்டு உள் ளிட்ட தயாரிப்புக்கு மூலப்பொரு ளாக பயன்படுத்தி வருகிறோம். வழக்கமான காகிதம் போலவே இதையும் பயன்படுத்துகிறோம். மற்றபடி இதில் கூடுதல் தரம் இருப்பதாக கூற முடியாது. வாங்கியதை பெருமளவில் பயன் படுத்திவிட்டோம்” என்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத் தாள்களை, கூழாக்குவதற்காக தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பதற்கு முன், அவற்றின் எண்கள் வங்கி நிர்வாகத்தால் குறித்துக்கொள்ளப்படும். அடுத்ததாக அவை மறு பயன்பாட்டுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், வங்கியிலேயே அந்த பணத் தாள்கள் இரண்டு துண்டாக கிழிக்கப்படும். அதன்பிறகே, தனியார் நிறுவனத்துக்கு எடை போட்டு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.