Last Updated : 02 Dec, 2016 12:30 PM

 

Published : 02 Dec 2016 12:30 PM
Last Updated : 02 Dec 2016 12:30 PM

சீரழிவின் உச்சத்தில் கீழவாசல் மீன் மார்க்கெட்: பொதுமக்கள், மீன் வியாபாரிகள், மீன் வெட்டுவோர் கடும் பாதிப்பு

அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் என அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் புதிய மீன் மார்க்கெட், மாநகராட்சி, சுகாதாரத் துறையின் அலட்சியம், மொத்த வியபாரிகள் சிலரின் பிடிவாதத்தால் சீரழிந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், மீன் வியாபாரிகள், மீன் வெட்டுவோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காவிரி டெல்டாவின் முக்கிய மீன் சந்தையான தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட்டுக்கு, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம், சென்னை மற்றும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்படுகின்றன.

புதிய மீன் மார்க்கெட்...

தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி சந்தையின் ஒரு பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் முன்னர் செயல்பட்ட இந்த மீன் சந்தையை, இடப் பற்றாக்குறை, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களுக்காக இடம் மாற்ற முடிவு செய்து, சற்றுத் தொலைவில் உள்ள ராவுத்தாபாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2001-ல் புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது.

ஆனால், முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் வரமாட்டார்கள், வியாபாரம் இருக்காது எனக் கூறி மீன் வியாபாரிகள் இடம் மாற மறுத்ததால், 7 ஆண்டுகளாக மார்க்கெட் மூடியே கிடந்தது. எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும், சுத்தம், சுகாதாரம் பாதுகாக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், உறுதியளித்ததை அடுத்து 2008-ல் வியாபாரிகள் புதிய மீன் சந்தைக்கு இடம் மாறினர். இந்த மீன் சந்தையில் 56 சில்லறை விற்பனை கடைகளும், 15 மொத்த (ஏல) வியாபாரிகளும், 3 முதன்மை ஏற்றுமதியாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வெட்டும் தொழிலாளர்களும் உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை சந்தை இயங்குகிறது.

மீன் கையாள்வது குறைந்தது...

முன்னர், நாளொன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு மீன்கள் கையாளப்பட்டன. சராசரியாக 2 ஆயிரம் பேர் வந்து சென்றனர். ஆனால், இங்குள்ள பிரச்சினைகளால் தற்போது இது குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். மீன் சந்தைக்கு வருவதற்கு கிழக்கில் ராவுத்தாபாளையம் சாலை, வடக்கில் பழைய மாரியம்மன் கோயில் சாலை, மேற்கில் ஜெயக்குமார் பாத்திரக்கடை எதிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய பாதைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், பின்னர் வந்த நகராட்சி நிர்வாகம், சிலரின் நிர்பந்தம் காரணமாக மேற்குப் பகுதி சாலையை அடைத்து கழிவறை கட்டியதால், தற்போது, இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. இவையும் மொத்த வியாபாரிகளின் பிடிக்குள் உள்ளன. அந்த கழிவறையும் பயனற்ற நிலையிலேயே உள்ளது.

பொதுமக்கள் அவதி…

மக்கள், சந்தைக்குள் நுழையும்போதே மூக்கைப் பிடித்துக்கொண்டு, குறுக்கே நிற்கும் மீன் லாரிகள், இருசக்கர வாகனங்கள், கொட்டிக் கிடக்கும் கழிவுகளை தத்தித் தாவியே கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து மீனை வாங்கிச் செல்பவர்களுக்கு, மீன் வெட்டும் இடத்தில் அடுத்த சோதனை காத்திருக்கிறது. அங்கும், முறையான வடிகால் மற்றும் போதிய இடவசதி இல்லாததால், மீன் வெட்டும் கட்டைகளையொட்டி, கழிவுகளின் மீதே வாடிக்கையாளர்கள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து மாநகரட்சி நகர் நல அலுவலர் டாக்டர் எஸ்.செந்தில்குமாரிடம் கேட்டபோது,

“மீன் சந்தையில் மாநகராட்சி சார்பில் துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன. ஏதேனும் குறைகள் இருந்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கடும் துர்நாற்றம் வீசுகிறது...

மீன் வெட்டுபவரான ஏ.சுலைமான் கூறியபோது,

“ஞாயிற்றுக்கிழமைகள், மழைக்காலங்களில் உள்ளே நுழையவே முடியாது. மாநகராட்சி நிர்வாகம், மீன் கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மீன் வெட்டும் இடத்திற்கு மேற்கூரையை நாங்களே அமைத்துக் கொண்டோம். எங்கும் கழிவு நீர் தேங்கி சுகாதாரம் இல்லாததால், பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு வரவே அஞ்சுகின்றனர். இதனால், 30 கடைகள் கூட செயல்படுவதில்லை. பல வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சென்று கடை வைத்துள்ளனர். பொதுமக்கள், பணம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை, துர்நாற்றத்திலிருந்து தப்பித்தால் போதும் என வெளியிலேயே வாங்கிக் கொள்வதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றார்.

உள்ளே நுழைய முடியவில்லை...

வாடிக்கையாளர் ஜி.ரமேஷ் கூறியபோது,

“மீன் சந்தைக்குள் நுழையவே முடிவில்லை. எங்கு பார்த்தாலும் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதற்குப் பயந்தே பெரும்பாலும் வெளியில் உள்ள கடைகளிலேயே வாங்கிக் கொள்வது வழக்கம். பணத் தட்டுப்பாட்டால் கூட்டம் குறைவாக உள்ளது என்பதால் உள்ளே வந்துள்ளேன்” என்றார்.

எந்த வசதியும் இல்லை…

மீன் வியாபாரி கண்ணன் கூறியபோது,

“நவீன மீன் சந்தை எனக் கூறித்தான் இங்கு வரச் செய்தனர். ஆனால், கட்டிடம் முழுவதும் ஒழுகுகிறது. தண்ணீர் வசதி, வடிகால் வசதி, கழிப்பிட வசதி எதுவும் முறையாக இல்லை. மீன் கடைகளுக்கு இடையே உள்ள நடைபாதைகள் குறுகியதாக இருப்பதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. போதிய வடிகால் இல்லை. நடைபாதைகளை உயர்த்தி அமைக்க வேண்டும். 10 டன், 20 டன் எடையுள்ள லாரிகள் வருகின்றன. அதற்கேற்ப சிமென்ட் தளம் தரமாக இல்லை. சுகாதார நிலை, வடிகால், சாக்கடை அடைப்பு, கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். மேற்கு பக்கம் பயன்படாமல் உள்ள கழிவறையை இடித்துவிட்டு, முந்தைய பாதையை திறந்தால், நெரிசலை குறைக்க முடியும்” என்றார்.

சில்லறை வியாபாரம் மட்டுமே…

மீன் வியாபாரி ஒருவர் கூறியபோது,

“இங்குள்ள முதன்மை வியாபாரிகள் ஒவ்வொருவரும் 5 முதல் 10 கன்டெய்னர் லாரிகள் வைத்துள்ளனர். மீன்களை இறக்கியவுடன் காலியான லாரிகளை எடுத்துச் செல்லாமல், பாதையை மறித்தும், இருசக்கர வாகன நிறுத்தத்திலும் நிறுத்தி வைப்பதால், சந்தைக்கு வரும் பொதுமக்கள், வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு, தூய்மைப் பணி, வாடகை வசூல் நடவடிக்கைகளை தனியாரிடம் விடாமல், உழவர் சந்தை போல, அனைத்தையும் நேரடியாக நிர்வகிக்க வேண்டும். இங்கு, சில்லறை விற்பனையை மட்டுமே வைத்துக் கொண்டு, மொத்த வியாபாரம் மற்றும் மீன் சேமிப்புக் கிடங்குகளை போக்குவரத்து வசதியுள்ள வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” என்றார்.

மொத்த வியாபாரிகள் சங்க உதவித் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் கூறியபோது,

“முடிந்த வரை லாரிகளை ஒதுக்கி நிறுத்தச் சொல்லியுள்ளோம். பக்கத்தில் உள்ள காலி இடத்தில் சிமென்ட் தளம் அமைத்துத் தந்தால் அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்வோம். வியாபார சூழலுக்கு ஏற்ப பிரச்சினைகளும் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x