Published : 25 Jan 2023 04:19 PM
Last Updated : 25 Jan 2023 04:19 PM

அதிமுக கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுப்பு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப் படம்

கரூர்: “திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுன்றனர்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனத்திடம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் இன்று (ஜன. 25) மதியம் 12.50 மணிக்கு மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: ''அதிமுக சார்பில் கட்சி நிர்வாகரீதியான மாவட்டங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று (ஜன. 25 தேதி) மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் அளித்திருந்தோம்.

திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே நடப்பதால் அரை கிலோமீட்டருக்குள் இருப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி வேலுசாமிபுரத்தில் நடத்த அறிவுறுத்தினர். வேலுசாமிபுரத்தில் அண்மையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தியதால் கரூர் 80 அடி சாலையில் அனுமதி கேட்டு போலீஸாரும் அனுமதி வழங்கின. இந்நிலையில், பொதுக்கூட்ட மேடை போட்டு, கொடிகள் நடப்பட்டு, பேச்சாளர்கள் வந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்திற்கு காலையிலே போலீஸ் பாதுகாப்புக்காக வந்துவிட்டனரா? என கேட்ட நிலையில் இன்று அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கின்றனர். எல்லா ஆட்சியின் போதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் ஒரே நாளில் நடந்து வந்துள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில்தான் இந்த நிலை, அதிமுக பொதுக்கூட்டத்திற்கே நீதிமன்றம் சென்றே அனுமதி வாங்கினோம். அனுமதியளித்த நிலையில் திடீரென போலீஸார் அனுமதி மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே இடத்தில் நாளை (ஜன. 26) போதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்ளோம்.

காவல் துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர். மிக மிக மோசமாக, கேவலமாக செயல்படுகின்றனர். அனைத்து இடங்களிலும், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. அதை போலீஸ் கட்டுப்படுத்தவில்லை. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை மாவட்ட ஊராட்சி அலுலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. நாங்கள் தாக்கப்பட்டோம். ஆனால் அதிமுகவினர் மீதே வழக்குகள் போடப்பட்டுவருகிறது. அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர். திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுகின்றனர்'' என்றார். கரூர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x