Published : 24 Jan 2023 05:32 PM
Last Updated : 24 Jan 2023 05:32 PM

சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறை: மழைக் காலப் பணிகளுக்காக முதல்வர் தலைமையில் பாராட்டு விழா

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை | கோப்புப் படம்

சென்னை: மழைக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னையில் 2021-ம் ஆண்டில் பெய்த கனமழை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் ஒருவாரம் வரை மழை வடியாத நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் 2021-ல் மழை வெள்ளம் பாதித்த தி.நகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2022 பருவமழையில் நீர் தேங்கவில்லை. அதேநேரம், கொளத்துார், பட்டாளம், புளியந்தோப்பு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அப்பகுதிகளில் இரவு, பகலாக மாநகராட்சி பொறியாளர்கள் முதல் பணியாளர்கள் வரை பணியாற்றினர். இணைப்பு இல்லாத 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில்,‘ரெடிமேட்’ கால்வாய் அமைத்து, மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.

கனமழை மற்றும் ‘மாண்டஸ்’ புயல் பாதித்த நேரத்திலும், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் களத்தில் நின்று பணியாற்றினர். இதனால், 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணமாக கடுமையான உழைப்பை வழங்கிய, மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க உள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் உள்ள தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் முதல் உதவி பொறியாளர்கள் வரை, மழை காலத்தில் கடுமையாக பணியாற்றினர். அவர்களுடன் மாநகராட்சி பணியாளர்களும், துாய்மைப் பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்றினர். அவ்வாறு பணியாற்றியவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறோம். தற்போது வரை 400-க்கு மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் இது போன்ற பாராட்டு விழா நடைபெறுவது முதல்முறை" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x