Published : 01 Dec 2016 10:34 AM
Last Updated : 01 Dec 2016 10:34 AM

கேளிக்கை வரிவிலக்கு பெற்ற திரைப்படங்கள்: தமிழ் வளர்ச்சிக்காக செய்தது என்ன?- வணிக வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கேளிக்கை வரி விலக்கு பெற்ற திரைப்படங்கள், தமிழ் வளர்ச்சிக்கு செய்தது என்ன என்பது குறித்து வணிக வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சவாரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் தனது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தர விட்டும் அதை அமல்படுத்தாதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில் ‘கபாலி’ படத்துக்கு இந்தியாவில் ‘யு’ சான்றிதழும், வெளிநாடுகளில் வன்முறை மிகுந்த படம் என ‘ஏ’ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வில் மட்டும் அந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்க என்ன காரணம்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று நடந்தது. அரசு தரப்பில் கடந்த 2006 முதல் தற்போது வரை 2,012 படங்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி அந்தப் பட்டியல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘கேளிக்கை வரிவிலக்கு பெற்றுள்ள திரைப்படங்கள் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் வளர்க்க என்ன செய்துள்ளன? தணிக் கைக்கு வரும்போது ஒரு மாதிரியாகவும், தணிக்கை பெற்ற பிறகு வேறுவிதமாகவும் திரையிடப்படுகிறது. அதை என்றைக்காவது ஆய்வு செய் கிறீர்களா? திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதன் மூலம் தயாரிப்பாளர்கள்தான் பலன் அடைகின்றனர். இதனால் மக்களுக்கு என்ன பலன்?’’ என கேள்வி எழுப்பினார்.

தொலைக்காட்சி நாடகங்களும்..

மேலும், ‘‘தொலைக்காட்சி நாடகங்களும் தவறான பாதையைத்தான் மக்களுக்கு போதிக்கின்றன. அவற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்’’, என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், ‘‘வரிவிலக்கு என்பது அரசின் கொள்கை’’ முடிவு என்றார்.

பணச் சலுகை எவ்வளவு?

‘‘அப்படியென்றால், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என சொல்வீர்களா?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, கேளிக்கை வரி விலக்கு எந்த அடிப்படையில் வழங்கப் படுகிறது. வரிவிலக்கு பெற் றுள்ள படங்கள் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள் ளன என்பது குறித்தும், 2006 முதல் 2016 வரை கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீத கேளிக்கை வரி விலக்கு அளித்ததன் மூலம் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட பணச்சலுகை எவ்வளவு என்பதையும் பட்டியலாக தாக்கல் செய்ய வேண்டும் என வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x