சீனாவின் ‘நகர்வுகள்’ முதல் ஈரோடு கிழக்கு அப்டேட் வரை - செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.23, 2023

சீனாவின் ‘நகர்வுகள்’ முதல் ஈரோடு கிழக்கு அப்டேட் வரை - செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.23, 2023
Updated on
3 min read

அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள்: நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாகக் கொண்டாடப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் - நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பெயர் சூட்டினார். அவற்றில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் 'வகிர்' திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் 'வகிர்' பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது.

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி டீசல்- மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க் கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும். இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

சீனா குறித்து டிஜிபிக்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை: நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 350 மிக முக்கிய டிஜிபி-க்கள், ஐஜிபி-க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தயாரித்த சீனா குறித்த மிக முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 'இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவும் சீன செல்வாக்கும் அது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கமும்' என்ற பொருளில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க சீனா என்னவெல்லாம் செய்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “கடந்த 25 ஆண்டுகளில் சீன பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள அந்த நாடு அதிக அளவில் கடன்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற பொருளாதார காரணங்களுக்காகவும் சீனா அதிக கடன்களைக் கொடுக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாணவிகள் வழக்கு: அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு முன் வந்தது. இந்த மனுவை விசாரிக்க மூன்று நபர் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லாமல் காப்பீட்டுத் திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஏறத்தாழ 1.5 கோடி நெருங்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவர்கின்ற வகையிலான திட்டமாக காப்பீட்டுத் திட்டம் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் அவர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கும் பணியினை முதல்வர் தொடங்கி வைத்து அவர்களுக்கு அடையாள அட்டையினை தருகிறார்" என்றார்.

பராமரிப்பு உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்: பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல் ஆதரிப்பார்": "கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவர் எனக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்” என்று ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல் ஆதரிப்பார்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தநிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் தரப்பு மனு தள்ளுபடி: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிஷப் பந்த் நலம் பெற வேண்டி சகவீரர்கள் பிரார்த்தனை: கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி சக இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தின் இந்தூருக்கு வந்துள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சென்ற சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்தனர்.

அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலக்கட்டத்திலும், எம்.பியாக இருந்தபோதும் அவர் நிர்வகித்து வந்த முக்கிய ஆவணங்களை அரசு ஆவணக் காப்பக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் வீட்டில் சோதனை நடந்துமாறு அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டது அதன் அடிப்படையில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக 6 ரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பைடன் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலானவை என்று கூறப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in