Last Updated : 23 Jan, 2023 04:57 PM

2  

Published : 23 Jan 2023 04:57 PM
Last Updated : 23 Jan 2023 04:57 PM

பாரதி, பாரதிதாசன் இல்ல முகப்பில் தமிழ் தவிர்த்து இந்தி, ஆங்கிலத்தில் ஜி20 அறிவிப்பு பதாகைகள்: பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுபெரும் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகைகளில் தமிழைப் புறக்கணித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளதற்கு பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி20 நாடுகளின் ஓராண்டு காலத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் 30 மற்றும் 31ம்தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரி முழுவதும் அறிவிப்பு பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த அறிவிப்பு பதாகைகளில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த அருங்காட்சியகத்திலும், பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டிலும் புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத்துறை ஜி20 மாநாடு குறித்த அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். அதில் ஆங்கிலமும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது. முக்கிய தமிழறிஞர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக உள்ள நிலையில் தமிழைத் தவிர்த்து இங்கு வரும் தமிழர்களுக்கு புரியாத ஹிந்தி மொழியில் பதாகை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பேசிய பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் செல்வம் கூறுகையில், "புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1939-ம் ஆண்டிலேயே இந்தி திணிப்பை எதிர்த்துப் பாடுகிறார். தொடர்ந்து மத்திய அரசின் இந்தத் திணிப்பை எதிர்த்தவர். அதேபோல் அவரது மகனும் எனது தந்தையுமான மன்னர் மன்னன் 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் 48 நாட்கள் சிறையிலிருந்த வரலாற்றை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.

அவர்கள் வாழ்ந்த வீடாகவும், நினைவு இல்லமாகவும் உள்ள அதன் வாயிலில் புதுவையில் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடர்பான புதுவை அரசுக் கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பில் தமிழ் இல்லை. இந்தியும் ஆங்கிலமுமே இருப்பதை எப்படி ஏற்க முடியும். உலகில் எந்த மொழியையும் படிக்கலாம் ஆனால் தமிழை தவிர்த்து விடக்கூடாது என பாடிய மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் தமிழை தவிர்த்து இந்தி மொழி இடம்பெற்றுள்ளது வேதனைக்குரியது.

ஆகவே, இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாரதிதாசன் நினைவு அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்தி, ஆங்கில விளம்பரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். அதே போல் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் உள்ள தமிழ் அல்லாத பதாகைகளை அகற்ற வேண்டும். அவ்வாறு புதுவை அரசு உடனே செய்யாவிடில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டம் அந்தந்த அருங்காட்சியகங்கள் முன்பு நடைபெறும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x