Published : 21 Jan 2023 09:31 PM
Last Updated : 21 Jan 2023 09:31 PM

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிடுக: விஜயகாந்த்

விஜயகாந்த் | கோப்புப்படம்

சென்னை: "ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் பெற்று வருகின்றனர்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களை தவிர, மற்ற அனைத்து அரசு தரப்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வினை 100 நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சியமைத்து 600 நாட்களைக் கடந்தும் மேற்கண்ட வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 88 ஆயிரம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் ஏங்கியே விண்ணுலகம் சென்றுவிட்டனர். மேலும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் மருத்துவக் காப்பீடு, அதாவது முதல்வர் காப்பீடு திட்டம்கூட இல்லாமல் குறைவான பென்சனில் பொருளாதார வசதியின்றி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கடுமையான நோயுடன் போராடி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதோடு, நீதிமன்றம் வரை சென்றும் தற்போதைய திமுக அரசு செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. வெற்றி பெற்றவுடன் 100 நாளில் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக அரசு, இதுவரை அதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் திமுக அரசு காலம் தாழ்த்தாமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x