Published : 21 Jan 2023 05:49 PM
Last Updated : 21 Jan 2023 05:49 PM

சென்னையில் நீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கம்: நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்

சென்னை: சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி(CRZ) வழங்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி முடிவடைந்ததும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு கீழ் மெட்ரோ அமைய உள்ளது. மேலும், பங்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைய உள்ளது. இதன்படி, திருமயிலையில் பங்கிங்காம் கால்வாயில் 58.33 மீ, அடையாற்றில் 666.03 மீ, இந்திரா நகரில் பங்கிங்காம் கால்வாயில் 1219.86 மீ என மொத்தம் 1219.86 மீட்டர் நீள பாதை, நீர்நிலைகளில் செல்கிறது.

இதில் மொத்தம் 1242 சதுர மீட்டர் பரப்பளவு கடலோர ஒருங்குமுறை மண்டத்தில் வருகிறது. எனவே, இதற்கு அனுமதி அளிக்கக் கோரி மெட்ரோ ரயில் சார்பில் மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த ஆணையம், இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய கடலோர ஒங்குமுறை ஆணையத்திடம் மெட்ரோ ரயில் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பம், நிபுணர் மதிப்பீட்டு குழுவின் முன்பு பரிசீலனைக்கு வந்தது. இந்நிலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி(CRZ) வழங்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x