Last Updated : 20 Jan, 2023 03:22 PM

1  

Published : 20 Jan 2023 03:22 PM
Last Updated : 20 Jan 2023 03:22 PM

புதுச்சேரி மாநில அந்தஸ்து எதிர்ப்பை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக

புதுச்சேரி | கோப்புப் படம்

புதுச்சேரி: “மாநில அந்தஸ்து எதிர்ப்புக் கருத்தை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை உடனடியாக அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி கூட்ட வேண்டும்” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், இபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் - பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
இந்நிலையில், புதுவை மாநில பாஜக தலைவர் மாநில அந்தஸ்து வழங்குவதை தொடர்பாக ஒரு குழப்பதை ஏற்படுத்தும் வகையில் இருவேறு கருத்துகளை கூறியது தவறானது.

மாநில அந்தஸ்து இல்லாததால் பட்ஜெட்டை கூட வடிவமைக்க முடியவில்லை. தனியாக தேர்வு வாரியம் இல்லை. மத்திய அரசின் அடிமை ஆட்சி போல புதுவை மாநில நிர்வாகம் உள்ளது. நமது மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்கவில்லை. திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், சட்டமன்றத்தில் அறிவிப்புகளை செயல்படுத்தவும்
மாநில அந்தஸ்து அவசியம். மாநில அந்தஸ்து இல்லாத்தால் துறைமுக விரிவாக்கம் கிடப்பில் உள்ளது. பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விஷயங்களில் நமது மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, பாஜக தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அந்தஸ்து அதிமுகவின் பிரதான கொள்கை முடிவு. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முதல்வர் ரங்கசாமி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களையும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்து சென்று
பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து வலியுறுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் ரங்கசாமி மேற்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டும். அப்போது குறைந்தபட்ச செயல் திட்டங்களை தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x