Published : 19 Jan 2023 07:22 AM
Last Updated : 19 Jan 2023 07:22 AM

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் சொத்துகள் மதிப்பீடு: வருவாய், பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை

நாமக்கல் சாமி நகரில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் இல்லம்.

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்துகள் சரியாக உள்ளனவா, என வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர்.

நாமக்கல் நகர அதிமுக செயலாளர் கே.பி.பி. பாஸ்கர். இவர் நாமக்கல் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். 2021-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இதனிடையே பாஸ்கர், அவரது மனைவி உமா ஆகியோர் 2011-15, 2016-2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கே.பி.பி. பாஸ்கர்

30 இடங்களில் சோதனை

தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அவரது வீடு உள்பட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வழக்குக்குத் தொடர்புடைய பணம் ரூ.14,96,900 மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.

இச்சூழலில், நேற்று காலை நாமக்கல் சாமி நகரிலுள்ள பாஸ்கர் வீட்டுக்கு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்றனர். பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர். தொடர்ந்து, பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டபோது கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும், பாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவரது சொத்து மதிப்பீடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மற்றும் வருவாய், பொதுப் பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து சரி பார்த்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x