Published : 18 Jan 2023 06:42 AM
Last Updated : 18 Jan 2023 06:42 AM

ஒரே நாடு ஒரே தேர்தலை 2024-ல் கொண்டுவர தீவிரம்: மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு

அண்ணா அறிவாலயம் | கோப்புப்படம்

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை 2024-ல் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

அதிமுக ஆதரவு

இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசின் செலவை குறைக்குமென அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தனது கருத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அதில் கூறியிருப்பதாவது.

1951 முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. பின்னர், சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியவில்லை. மேலும், 6, 7, 9, 11, 12 மற்றும் 13-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி ஆளுநரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது.

இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் ஆகும். எனவே, இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறும்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும்” என்றார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x