Last Updated : 23 Dec, 2016 11:55 AM

 

Published : 23 Dec 2016 11:55 AM
Last Updated : 23 Dec 2016 11:55 AM

வளர்ச்சிப் பாதையில் நடைபோடுமா அரியலூர் மாவட்டம்?- புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளை கடந்தும் முன்னேற்றம் இல்லை

புதிய மாவட்டமாகத் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தும் குழந்தைபோல தவழும் நிலையில் அரியலூர் மாவட்டம் உள்ளதாகவும், சிமென்ட் ஆலைகள் பல இருந்தும் வேலைவாய்ப்புக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லும் மக்கள் குறித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் இம்மாவட்ட மக்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக, அரியலூர் 2007-ம் ஆண்டு, நவம்பர் 23-ம் தேதி உருவாக்கப்பட்டது. சுமார், 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அரியலூர் மாவட்டம் கடலாக இருந்து பின்னர் கடல் உள்வாங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் படிமங்களாகி, அதனால் இம்மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்கிறது.

மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காரணங்களால், இம்மாவட்டம் பழங்கால உயிரின படிமப் புதையல்களின் இருப்பிடமாக உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலம், சங்க காலம் உள்ளிட்ட காலங்களில் மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்துள்ளதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பாளையக்காரர்கள், மராட்டியர்கள், நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அரியலூர் உள்ளடங்கி இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைக்கரை பாலம், வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம், உலக புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.

மாவட்டத்தில், திருமானூர், தா.பழூர் ஆகிய 2 ஒன்றியங்கள் டெல்டா பகுதியாக உள்ளன. முக்கிய சாகுபடி பயிர்களாக நெல், கரும்பு, கடலை உள்ளன. மானாவாரி பயிர்களாக முந்திரி, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் குறிப்பாக அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுண்ணாம்பு படிமங்கள் அதிகளவில் உள்ளதால் அரசு உள்ளிட்ட 7 சிமென்ட் ஆலைகள் அமைந்துள்ளன.

புவியியல் ரீதியாக கொள்ளிடம், மருதையாறு மற்றும் பொன்னாறு என 3ஆறுகள் ஓடினாலும், மூன்றுமே மழைக்காலங்களில் வடிகாலாகவே உள்ளன.

இவ்வாறு பல வகையிலும் சிறப்புகள் கொண்ட அரியலூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 9-வது ஆண்டை நிறைவு செய்து 10-வது ஆண்டைத் தொடங்குகிறது. பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் பொருளாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்கள், அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளிட்டவைகளில் இன்னும் தவழும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளதென்றால் அது மிகையாகாது என்கின்றனர் இம்மாவட்ட மக்கள்.

மாவட்டம் பிரிக்கப்பட்டு 9 ஆண்டுகளானாலும் கைரேகை மற்றும் மோப்ப நாய் பிரிவு, அனைவருக்கும் கல்வி இயக்கம், உணவு பொருள் பாதுகாப்புத் துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து, காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அலுவலகங்கள் பெரம்பலூர் மாவட்டத்திலேயே செயல்பட்டு வருகின்றன.

மக்களின் கோரிக்கைகள்…

அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், அரசு மகளிர் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை, ஆணை வாரி நீர்த்தேக்கம், முழுமையான கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வெள்ளாற்றில் மேம்பாலம் ஆகியவற்றுடன், ஜெயங்கொண்டத்தில் முந்திரி ஆராய்ச்சிப் பண்ணை, முந்திரிப் பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். கிடப்பில் உள்ள பழுப்பு நிலக்கரித் திட்டத்தை தொடங்க வேண்டும் என்கின்றனர் மாவட்ட மக்கள்.

வேலைவாய்ப்பு இல்லை…

இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் சிற்றம்பலம் கூறியபோது, மாவட்டத்தின் தலைநகராக உள்ள அரியலூரைச் சுற்றி வந்தால் மாவட்டத்தின் வளர்ச்சி என்ன என்பது தெரியவரும். மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் பெருகி இருந்தாலும் அதில் இம்மாவட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவு.

நிலம் கொடுத்தால் வேலைவாய்ப்பு என்று கூறிய தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு நிலங்களை கொடுத்துவிட்டு வேலையும் கிடைக்காமல் விவசாயம் செய்யமுடியாமல் பரிதவிக்கும் மக்களே மாவட்டத்தில் அதிகம் உள்ளனர்.

ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி தொழில் செய்து வந்தனர். ஆனால், தற்போது விசைத்தறி அதிகளவில் வந்ததால் கைத்தறி நெசவாளர்கள் வேலையிழந்து அண்டை மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தொழில்நுட்ப விழிப்புணர்வு…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உலகநாதன் கூறியபோது, “கொள்ளிடம் ஆற்றில் அரசின் விதிமுறையை மீறி அதிகளவு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், டெல்டா பகுதியாக உள்ள திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் சில ஆண்டுகளில் அதற்கான அடையாளமே இல்லாத நிலைக்கு தள்ளப்படும்.

விவசாய வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள், அதிக விளைச்சல் தரக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை சம்மந்தப்பட்ட துறைகள் ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட முந்திரி விளைச்சல் கடந்த 4 வருடமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாசன ஏரிகள் கடந்த 20 ஆண்டுகளாக தூர் வாரப்படாமலேயே உள்ளன” என்றார்.

மருத்துவ வசதிகள் வேண்டும்

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறியபோது, அரியலூர் தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நவீன மருத்துவ வசதிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொது மருத்துவம் சார்ந்த அனைத்து மருத்துவர்கள், சிடி ஸ்கேன் பிரிவு, அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, பிரசவ அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருந்தும் காற்றோட்டமான இடவசதி, கட்டிட வசதியில்லை” என்றார்.

தொழிற்படிப்புக்கு கல்லூரிகள்…

ஓய்வுபெற்ற ஆசிரியர் நல்லப்பன் கூறியபோது, “மாவட்டத்தில், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட 3 கலைக்கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தற்போதுள்ள அரசு கலைக்கல்லூரியில் அனைத்து நிலை படிப்புகளும் தொடங்கப்பட்டிருந்தாலும் போதிய பேராசிரியர்கள் இல்லை. மாவட்டத்தில் அதிகளவு சிமென்ட் ஆலைகள் உள்ளதால் தொழில் படிப்பு சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், கூடுதலாக தொழில் படிப்பு சம்மந்தப்பட்ட கல்லூரிகள் உருவாக்க வேண்டும்” என்றார்.

சமூக ஆர்வலர் சங்கர் கூறியபோது, “அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால், சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சி பெறவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x