Published : 16 Jan 2023 03:59 PM
Last Updated : 16 Jan 2023 03:59 PM

பொங்கல் | சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு; விதிமீறிய 536 வாகனங்கள் பறிமுதல்

கோப்புப்படம்

சென்னை: பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 376 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், 2023-ம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியமாக பொங்கல் கொண்டாட்டத்தின்போது கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நேற்று (15.01.2023) பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் சென்னை பெருநகர காவல் 12 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.

காவல் குழுவினர் நேற்று (15.01.2023) இரவு, 5,904 வாகனங்களை சோதனை செய்து, இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய (Drunken Drive) குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது 376 வழக்குப் பதிவு செய்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் (Without Helmet), வாகனங்களும் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் (Triples Ride), இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் (Over Speed & Dangerous Drive) போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் பொது மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், விபத்தில்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட சென்னை பெருநகர காவல் துறையினர், எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை ஓட்டுமாறும் மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரேஸ் போன்ற பந்தயங்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் இதே போன்று அடுத்த இரண்டு நாட்களுக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் தொடர்ந்து மேற்கண்டவாறு வாகன தணிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கடுமையாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x