Published : 16 Jan 2023 03:33 PM
Last Updated : 16 Jan 2023 03:33 PM

அடுத்தடுத்த திட்டங்கள் என்னென்ன? -  சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை சர்வதே புத்தக் காட்சியை தொடங்கிவைத்த அமைச்சர்

சென்னை: சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜன.16) துவக்கி வைத்தார். இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்கா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "சர்வதேச அளவில் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான், மலேசியா பல நாடுகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாடுகளிலிருந்தும், அவர்களின் நாட்டில் பிரபலமான நூல்களை கொண்டு வந்துள்ளார்கள். நேரில் பங்கேற்க இயலாத வெளிநாட்டு எழுத்தாளர்கள் காணொலி மூலம் உரையாடும் நிகழ்வுகளும் உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அவர்கள் மொழி, நாட்டின் கொடியும் உள்ளது.

தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தகக் காட்சி நடக்கிறது. 30 முதல் 50 தமிழ்ப் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளுக்கு மொழிப்பெயர்க்க திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று மற்ற நாடுகளைச் சார்ந்த நூல்களையும் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளோம். தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும். இது விற்பனைக்கான இடம் அல்ல. நம் நூல்களை அவர்களும், அவர்களின் நூல்களை நாமும் அறிந்துக்கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது” என்றார்

முன்னதாக, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், "மிக அழகாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில் திருக்குறள் பல மொழிகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் பரப்புரைக் கழகத்தை முதல்வர் துவக்கிவைத்தார். தமிழை உலகமெங்கும் கொண்டு செல்வோம். உலகத்தை இங்கு வரவேற்போம் என்பதுதான் இந்தப் புத்தக் காட்சியின் மையக்கருத்தாக உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x