வேங்கைவயல் வழக்கு மாற்றம் முதல் சீனாவின் கரோனா உயிரிழப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.14, 2023

வேங்கைவயல் வழக்கு மாற்றம் முதல் சீனாவின் கரோனா உயிரிழப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.14, 2023
Updated on
3 min read

“சமத்துவப் பொது விழாவாகத் திகழ வேண்டும்” - முதல்வர் பொங்கல் வாழ்த்து : “சாதி, மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும், தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொது விழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேங்கைவயல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு: புதுக்கோட்டை - வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தபட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகரிப்பு” - தமிழிசை கருத்து: ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது என்றும், ஆளுநர் - தமிழக அரசு விவகாரத்தில் இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும் என்றும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு?: மத்திய சட்ட ஆணையம் `ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை காட்டி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, “இது அதிமுகவின் கொள்கை முடிவு. இதை பொது வெளியில் கூற முடியாது. கடிதம் அனுப்பிவிட்டோம். கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது சஸ்பென்ஸ். எல்லாருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மகிழ்ச்சிதான். திமுகவிற்கு மட்டும் இது வயிற்றில் புளியை கரைக்கும் விஷயமாக உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங். எம்.பி. மாரடைப்பால் மரணம்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பஞ்சாபின் ஃபதேகர் பகுதியில் உள்ள சிர்ஹிந்த் பகுதியில் கடந்த புதன்கிழமை இருந்து தொடங்கியது. லூதியானா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற யாத்திரையில் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுக்ரி பங்கேற்றார். யாக்திரை பல்லூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவை அடுத்து, சனிக்கிழமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மேலும், ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை: டெல்லியில் மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோதியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணிஷ் சிசோதியாவின் தனிப்பட்ட உதவியாளரும் சிக்கிய நிலையில், அவரிடம் அமலாக்கத் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிஷ் சிசோதியாவின் அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

மக்களவைத் தேர்தல் குறித்து அமர்த்தியா சென் கருத்து: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியமானவையாக இருக்கும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எண்ணுகிறேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, திமுக ஒரு முக்கியமான கட்சி. திரிணாமூல் காங்கிரஸும் முக்கியமான கட்சிதான். சமாஜ்வாதி கட்சிக்கு சில நிலைப்பாடுகள் உள்ளன. எனினும், அந்தக் கட்சியின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்தியாவின் பார்வையை, பாஜக பெருமளவு குறைத்துவிட்டது. இந்தியா என்றால் அது இந்து இந்தியா, இந்தி பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதாக அது குறுக்கிவிட்டது. அப்படி இருக்கும்போது, இன்றைக்கு அந்தக் கட்சிக்கு மாற்று இல்லாதது வேதனையானது" என்று தெரிவித்தார்.

சீனாவில் கரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் பலி: சீனாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

போகி - சென்னையில் காற்று மாசு நிலவரம்: போகிப் பண்டிகையன்று சென்னையில் காற்று தரக் குறியீடு 14 மண்டலங்களில் மிதமான அளவிலும், ஒரு மண்டலத்தில் மோசமான அளவிலும் இருந்ததாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது: காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவரும் குண்டுகுளம் என்னுமிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக மது அருந்திவிட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பல், மாணவி மற்றும் மாணவரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த 5 பேர், அந்த மாணவியை கத்திமுனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் புகார் அளிக்காதபோதிலும், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in