குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு சம்பவம்: வேங்கைவயல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி
மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி
Updated on
1 min read

சென்னை: புதுக்கோட்டை - வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது டிச.26-ம் தேதி தெரியவந்தது. அன்றிலிருந்து அந்தக் குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வேங்கைவயலில் நேரில் ஆய்வு செய்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தபட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

85 பேரிடம் விசாரணை: எஸ்.பி - முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்ப ட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் எஸ்.பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 கொண்ட குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து பெறப்பட்ட மாதிரி தடய அறிவியல் ஆய்வ கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நேர்மையாகவும், ஒளிவு மறை வின்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in