Last Updated : 14 Jan, 2023 01:00 PM

2  

Published : 14 Jan 2023 01:00 PM
Last Updated : 14 Jan 2023 01:00 PM

பிரதமரின் ‘தேர்வும், தெளிவும்’ கலந்துரையாடல்: 10 லட்சம் மாணவர்களை பங்கேற்க வைக்க பாஜக திட்டம் 

மோடி | கோப்புப் படம்

மதுரை: பிரதமர் மோடியின் ‘தேர்வும், தெளிவும்’ கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி காட்சி வழியாக தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களை பங்கேற்க வைக்க பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி, துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, 2018-ம்ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ‘தேர்வும் தெளிவும்’ என்ற பெயரில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்தாண்டு ஜனவரி 27-ம் தேதி ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இந்தாண்டு பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜன. 20-ல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாஜக சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜன. 27ல் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வும், தெளிவும் நிகழ்வு குறித்து பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட பார்வையாளர்கள், தலைவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் குரல் பதிவு வழியாக ஆலோசனை வழங்கினர். அப்போது அண்ணாமலை பேசுகையில், "பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளையும் கேட்க வைக்க வேண்டும். இது ஒரு அரசியல் கலப்பு இல்லாத நிகழ்வு. மாணவர்களை தேர்வுக்கு பயமில்லாமல் தயார்படுத்தும் நிகழ்வு. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 500 மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும். இதற்கான பணியை வேகப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி நிகழ்வை தெரியப்படுத்த வேண்டும். தேர்வும், தெளிவும் நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.

முன்னதாக ஏ.என்.எஸ்.பிரசாத் பேசுகையில், "தேர்வும், தெளிவும் தொடர்பான பிரதமரின் பேச்சை ஆயிரம் மண்டல்களில் பத்து லட்சம் மாணவர்களை கேட்க வைக்க வேண்டும். இதில் பங்கேற்க தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தனியார் பள்ளிகளில் 10-க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். பாஜக நிர்வாகிகளின் மகன், மகள் பயிலும் பள்ளிகளிலும் தேர்வும், தெளிவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நூறு மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியாக பிரதமரின் பேச்சை ஒளிபரப்ப வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x