Published : 13 Jan 2023 09:44 PM
Last Updated : 13 Jan 2023 09:44 PM

மூடபழக்கங்களுக்கு எதிரான முரசொலியாக கலைகளை மாற்றியது திராவிட இயக்கம்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழாவில் உரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "திராவிட இயக்கம்தான், சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்மட்டியாய் மூடபழக்கங்களுக்கு எதிரான முரசொலியாக கலைகளை மாற்றியது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சஙகமம் - நம்ம ஊர் திருவிழாவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது: "திராவிட இயக்கம்தான் சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்கான சாமர வீச்சாக இல்லை. சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்மட்டியாய் மூடபழக்கங்களுக்கு எதிரான முரசொலியாக கலைகளை மாற்றியது.

திராவிட இயக்கம்தான் கலை வடிவங்கள் மூலமாக சாமான்ய மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலிகளை பேசியது. திராவிட இயக்கம்தான் சாமான்ய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.

நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் வழிகளில் மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கும் கண்ணுங்கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. இது கலைஞர் வழிநடக்கக்கூடிய அரசு, அதனால்தான் இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில், கலை பண்பாட்டுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48 கோடிக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கலைகள் வளர வேண்டும் என்றால், கலைஞர்கள் வறுமையின்றி வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்கு கலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக வாய்ப்புகள் இன்றி இருந்த கலைஞர்களுக்கு வான் மழையாய் ஏராளமான வாய்ப்புகளும், நலத்திட்டங்களும் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் கூடும் இடங்களில் கலை சங்கமம் என்ற பெயரில் 120 கலை நிகழ்ச்சிகளை நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x