Last Updated : 13 Jan, 2023 04:20 AM

 

Published : 13 Jan 2023 04:20 AM
Last Updated : 13 Jan 2023 04:20 AM

மதுரை காமராசர் பல்கலை.யில் சுழற்சி மூலம் துறை தலைவர்கள் நியமிக்க முயற்சி: மூத்த பேராசிரியர்கள் எதிர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தில் பணி மூப்பு முறைக்கு பதிலாக சுழற்சி முறையில் துறைத் தலைவர்களை நியமிக்க முயற்சிக்கும் நிர்வாகத்துக்கு மூத்த பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட புலங்கள் உள்ளன. ஒவ்வொரு புலத்திலும் 2 அல்லது 5 துறைகள் என்ற வகையில் மொத்தம் 77 துறைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் பணி மூப்பின் அடிப்படையில் மூத்த பேராசிரியர்களே துறைத் தலை வராக இருக்கின்றனர். அவர்கள் பணி ஓய்வுபெற்ற பின்பு அடுத்த நிலையில் உள்ள பேராசிரியர் துறைத் தலைவராக பதவி உயர்வு பெறுவார்.

சுழற்சி முறையில்: இந்த நடைமுறையை மாற்றி பணி மூப்பு அடிப்படையில் இன்றி நிர்வாக காரணத்துக்காக சுழற்சி முறையில் ஜூனியர் பேராசிரியர்களும் 2 ஆண்டுகளுக்கு துறைத் தலைவராக நியமிக்கும் நடைமுறையை கொண்டு வர பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக பேராசிரியை அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை துணைவேந்தர் ஜெ.குமார் நிய மித்திருக்கிறார். இது தங்களது உரிமையை பாதிக்கும் என மூத்த பேராசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

சிறப்புக் குழு - இது குறித்து மூத்த பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: துறைத் தலைவர் பொறுப்பை சுழற்சி முறையில் மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சிறப்புக் குழு அமைக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. துறைத் தலைவரை பணி மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் சரியானது.

சுழற்சி மூலம் தற்காலிகமாக நியமிக்கப்படும் துறைத் தலை வர்கள், ஆட்சிப்பேரவை உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டால், அவர்களை நியமித்த நிர்வாகத் துக்கு ஆதரவாக மாறிவிடும் நிலை உருவாகும். பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வாணையர், கல்லூரி வளர்ச்சிக் குழு தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அதி காரிகள் மூலம் இயங்கும் போக்கு மாற வேண்டும். இது கல்விச் சூழ லில் முன்னேற்றத்துக்கு உதவாது.

துறைத் தலைவர்களை சுழற்சி முறையில் நியமிப்பதற்கு எடுக்கப்படும் முன்னெடுப்பை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக துணைவேந்தர், பதிவாளர், உயர் கல்வித் துறை அமைச்சர், செயலருக்கு மூத்த பேராசிரியர்கள் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக துணைவேந்தர் ஜெ.குமார் கூறுகையில், தற்போதைய மாறிவரும் கல்விச் சூழலில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என திட்டமிடுகிறோம். இதில் பேராசிரியர்களின் கருத்துகளை அறியவும், சில துறைகளின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை திரட்டுவதற்காகவும் பேராசிரியை ஒருவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x