Published : 12 Jan 2023 05:17 PM
Last Updated : 12 Jan 2023 05:17 PM

கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் முழுமையாக புறக்கணித்து விட்டன.

பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கும், வர்த்தக ரீதியாகவும் முக்கியமான சாலையாகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுப்படுத்த வேண்டுமென எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில், சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே கிழக்கு கடற்கரை சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். சாலையை சரி செய்ய இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x