Last Updated : 12 Jan, 2023 01:01 AM

1  

Published : 12 Jan 2023 01:01 AM
Last Updated : 12 Jan 2023 01:01 AM

காமராசர் பல்கலை நிர்வாக முயற்சிக்கு மூத்த பேராசிரியர்கள்  கடும் எதிர்ப்பு

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட புலங்கள் உள்ளன. ஒவ்வொரு புலத்திலும் 2 அல்லது 5 என, சுமார் 77 துறைகளும் செயல்படு கின்றன. ஒவ்வொரு துறையிலும் பணி மூப்பில் மூத்த பேராசிரியர்களே துறைத் தலைவராக இருக்கின்றனர்.

துறைத்தலைவர்களில் ஒருவரே சுழற்சி முறையில் தலா 2 ஆண்டுக்கு ஒருமுறை புலத்தலைவராகவும் செயல் படலாம் என்பது பல்கலைக் கழக விதிமுறையாக இருக்கிறது என, மூத்த பேராசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி, பணி மூப்பு அடிப்படையின்றி, நிர்வாக காரணத்திற்ககென சுழற்சி முறையில் ஜூனியர் பேராசிரியர்களும் குறிப்பிட்ட 2 ஆண்டுக்கு துறைத் தலைவராகலாம் என்ற நடைமுறையை கொண்டு வர பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சிக்கிறது.

இதற்காக பெண் பேராசிரயை ஒருவர் அடங்கிய சிறப்புக்குழு ஒன்றை துணைவேந்தர் ஜெ. குமார் நியமித்து இருக்கிறார். இக்குழு அனைத்து துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை தங்களது உரிமையை பாதிக்கும் என மூத்த பேராசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

இது குறித்து மூத்த பேராசிரியர்கள் சிலர் கூறியது: திறன் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கல்விச் சூழலை ஜனநாயக முறையில் பல்கலைக்கழக உன்னத நோக்கம் வலுப்பெறும். புலங்கள் ஊக்குவிப்பு என்ற எண்ணத்தில் துறைத்தலைவர் பொறுப்பை சுழற்சி முறையில் மாற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்கலைக்கழக சட்டவிதிகளில் நிர்வாக அலகு என்பது புலம். இதன் கீழ் இயங்குவது தான் துறை. துறைத்தலைவர் பதவி பணி மூப்பில் தேர்வு செய்யப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்கள் ஆட்சிப்பேரவை, கல்விக்குழு உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். இவர்கள் பல்கலைக்கழக சட்டங்களை உருவாக்குதல், திருத்துதல், ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை கொண்ட அமைப்பாக செயல்பட முடியும்.


இத்தகைய சூழலில் சுழற்சி அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் துறைத் தலைவர்கள், ஆட்சிப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டால் , அவர்களை நியமித்த நிர்வாகத்தின் கைப்பொம்மைகளாக மாறிவிடும் நிலை உருவாகும். இது போன்ற நடைமுறை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்கலைக்கழக பதிவாளர், தேர்வாணையர், கல்லூரி வளர்ச்சிக்குழு தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் காலியாக உள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரிகள் மூலம் இயங்கும் போக்கு ஒற்றை அதிகார சூழலுக் கும் இட்டுச் செல்லும். துணைவேந்தர் அனைத்து அதிகாரங்களை பெற்றவராக மாறிவிடும் வாய்ப்பு ஏற்படும். இது கல்வி சூழலில் முன்னேற்றத்திற்கு உதவாது. அதிகார குவிலுக்கு வழிவகுக்கும். பல்கலை சட்டவிதிகளை உருகுலைக்கும். துறைத்தலைவர்கள் சுழற்சி முறையில் நியமிக்கலாம் என்ற முன்னெடுப் பை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிடவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மூத்த பேராசிரியர்கள் துணைவேந்தர், பதிவா ளர், உயர்கல்வித்துறை அமைச்சர், செயலருக்கு புகார் மனுக்கள் அனுப்புகின்றனர். துணைவேந்தர் ஜெ. குமார் கூறுகையில், ‘‘ தற்போதைய மாறிவரும் கல்விச் சூழலில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என, திட்டமிடுகி றோம். இதில் பேராசிரியர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது. ஒருவர் ஓய்வு பெறும்போது, அடுத்த தலைமுறைக்கான சில தகவல்களை சொல்லாமல் விட்டுச் செல்கின்றனர்.

மாணவர்களுக்கான சில நலன் பாதிப்பு தகவல் கவனத்திற்கு வந்ததால் இதற்கான முன்னெடுப்பு முயற்சி எடுக்கிறோம். சில துறைகளில் அட்மிஷன் குறைவதத அதிகரிக்க என்ன வழிமுறை உள்ளிட்ட வளர்ச்சிக்கான கருத்துக்களை திரட்டுதல் போன்ற விவரங்களை ஒருங்கிணைக்கும் விதமாக பெண் பேராசிரியை ஒருவர் அடங்கிய குழு ஏற்பாடு செய்துள்ளோம். முழு விவரம் சேகரித்தபின், அது சாத்திமா என, முடிவெடுக்கப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x