Published : 10 Jan 2023 07:29 AM
Last Updated : 10 Jan 2023 07:29 AM

2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை: முத்தங்கா சரணாலயத்தில் பராமரிக்க முடிவு

பந்தலூர் நீடில் ராக் வனத்தில் கடந்த மாதம் பிடிபட்ட மக்னா யானை. (தந்தம் இல்லாத யானை) (கோப்புப்படம்)

கூடலூர்: பிஎம்2 என்ற மக்னா யானை, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கேரள மாநிலத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. முத்தங்கா வனச்சரணாலயத்தில் வைத்து யானையை பராமரிக்க கேரள வனத்துறை முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலவி வந்த மக்னா யானை ஒன்று (தந்தம் இல்லாத ஆண் காட்டுயானை) குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உணவாக உட்கொண்டு வந்தது.

கடந்த 10 மாதங்களில் சுமார்50 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. மனிதர்களையும் தாக்கி வந்தது. இந்த யானையைப் பிடிக்க வலியுறுத்தி பந்தலூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலவி வரும் மக்னா யானையைப் பிடித்து முதுமலை அடர்வனத்துக்குள் விடுவிக்க வேண்டுமென வனத்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதன் அடிப்படையில் மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த நவம்பர் மாதம் ஈடுபட்டனர். இந்நிலையில், 18 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கடந்த மாதம் 9-ம் தேதிகூடலூர் அருகில் உள்ள புளியம்பாறை பகுதியில் மக்னா யானை உலவுவதை உறுதி செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதுமலையில் விடுவிப்பு: நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை லாரியில் ஏற்றி முதுமலைக்கு உட்பட்ட அடர் வனப் பகுதியான காங்கிரஸ் மட்டத்தில் விடுவித்தனர். யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வனத்தில் விடுவிக்கப்பட்ட யானை மீண்டும் தனது இருப்பிடத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது.

காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியிலிருந்து பந்தலூர் நோக்கி பயணித்த யானை, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கேரள மாநில எல்லையில் நடமாடி வந்தது. கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை, அங்கு ஒரு முதியவரை தாக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.இதையடுத்து, யானையை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஒரு மாத காலத்தில், இரண்டாம் முறையாக யானைமயக்க ஊசி செலுத்தி நேற்று பிடிக்கப்பட்டது. கேரள வனத்துறையினர் பிஎம்2 யானைக்கு மயக்க ஊசி செலுத்தி நேற்று மதியம் பிடித்தனர். இம்முறை யானையை வனத்துக்குள் விடுவிக்காமல், வனத்துறையினர் பராமரிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளர்ப்பு யானையாக..

கேரள வனத்துறையினர் கூறும்போது, ‘‘பிஎம்2 யானை தமிழக அரசு உத்தரவின் பேரில் வனத்தில் விடுவிக்கப்பட்டது. ஆனால்,யானை மீண்டும் குடியிருப்பு பகுதிகளை தேடி வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, தற்போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானையை, முத்தங்கா வனச்சரணாலயத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உள்ளோம். அங்கு யானை வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு, வனத்துறையினர் பராமரிப்பில் இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x