ஆளுநர் உரை முதல் சட்டப்பேரவை சலசலப்புகள்: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2023

ஆளுநர் உரை முதல் சட்டப்பேரவை சலசலப்புகள்: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.9, 2023
Updated on
4 min read

ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்: இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது; பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது; மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது; 2,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது; 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆளுநர் உரையை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார். மேலும், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் தனது உரையில் 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டதைக் குறிப்பிட்டு, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

ஆளுநர் மீது அவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு: அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்து முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும் அரசின் கொள்கைகளுக்கு மாறாக அவர் நடந்து கொண்டார்” என்று பேசினார்.

மேலும், “சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பது.

தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்... வெளிநடப்பு செய்த ஆளுநர்!: முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசிக்க தொடங்கியதும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். ஆளுநர் வெளியேறியதும் முதல்வரின் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவை நிகழ்வுகள் முடிந்து தேசியக் கீதம் பாடப்படும்போது ஆளுநர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த வார்த்தைகள்: ஆளுநர் உரையில் உள்ள 65-வது பத்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்துவிட்டது தெரியவந்துள்ளது. இந்தப் பத்தியில், சமூகநீ்தி, சுயமரியாதை
அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி மற்றும் தமிழ்நாடு அமைதிப் பூங்கா முதலான வார்த்தையும் ஆளுநர் வாசிக்க மறுத்துள்ளார்.

ஆளுநர் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு தயாரித்த உரையை முறையாக வாசிக்காமல், முதல்வர் பேசும்போது பாதியில் வெளிநடப்புச் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு எதிர்கட்சிகள் கண்டணம் தெரிவித்துள்ளன. “தமிழக அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பான ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகங்களை தமிழக ஆளுநர் தவிர்த்ததைப் போல, மத்திய அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பு வாசகங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் அதிலிருந்து சில வாசகங்களை தவிர்த்து வாசித்தால் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா? பாஜக ஏற்றுக் கொள்ளுமா?" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌ அனைத்துக் கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்

“ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று உச்சரிக்க மறுத்ததன் மூலம், காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் செய்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயல்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“மரபுகளை உடைத்து விட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆளுநர் செயல் - வானதி, அண்ணாமலை ஆதரவு: இந்த சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையின் வெளியே பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. ஆளுநர் நீங்கள் நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை, உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது நீங்கள் திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு ஆளுநரை அவமதித்துள்ளீர்கள். ஆளுநரை அசிங்கப்படுத்துகிறீர்கள். ஆளுநரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள்" என்று கூறினார்.

இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, "உண்மைக்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் உரையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அது ஒன்றும் திமுகவின் கட்சிக் கூட்டம் அல்ல" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்: தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் பொங்கல் தொகுப்புக்கான பொருட்கள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நோயாளிகள், நடமாட முடியாத முதியவர்களுக்கு பதில் வேறு நபர்கள் வந்தால் பரிசுத் தொகுப்பை வழங்கலாம். 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். தரமான அரிசி, சர்க்கரையை வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புக்காக அனுப்பிவைக்கப்பட்ட பச்சரிசியை தான் வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பழைய அரிசியை வழங்கக் கூடாது என ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

“திறன் மிக்க மனித வளத்தின் தலைநகரமாக திகழும் இந்தியா”: “உலகின் திறமை மிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 17-வது ஆண்டு கருத்தரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர்“இந்தியா ஓர் அறிவு மையமாக மட்டும் திகழவில்லை; திறமை மிக்க மனித வளத்திற்கான தலைநகராகவும் திகழ்கிறது. நமது இந்திய இளைஞர்களின் திறன்கள், மதிப்பீடுகள், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியாவின் இந்தத் திறமை மிக்க மனித வளம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும்” என்று கூறினார்.

பெண் சக்தியோடு தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி தினமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஹரியாணாவிலுள்ள கான்பூரின் கோலியன் பகுதியில் இருந்து காலையில் யாத்திரை தொடங்கியது. வடமாநிலங்களில் நிலவும் பனிபொழிவு காரணமாக ஹரியாணாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் காலையில் வாகன விளக்குகள் ஒளி பனிமூட்டத்திற்கு இடையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொங்கியது. ராகுல் காந்தியுடன் பெண்கள் பலர் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in