Published : 09 Jan 2023 12:20 PM
Last Updated : 09 Jan 2023 12:20 PM

உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள் - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்.

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை (ஜன 9) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முறையாக வாசிக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதனைத் தெரிவித்துள்ளன.

திராவிட மாடல், அண்ணா, பெரியார், காமராசர், கலைஞர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரையும் ஆளுநர் தவிர்த்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதை விளக்கி அமைக்கப்பட்ட வாக்கியமும் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளுநர் ஆங்கில உரை முடிந்தவுடன் சபாநாயகர் அப்பாவு தமிழ் மொழியாக்கத்தை வாசித்தார். அப்போது அவர் ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளை தவிர்த்ததை சுட்டிக்காட்டினார். சபாநாயகர் உரை முடிந்தவுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் அரசு கொடுத்த உரையில் இருந்து சில வார்த்தைகளைத் தவிர்த்தது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே ஆளுநர் வெளியேறினார். தமிழக சட்டப்பேரவையில் ஆண்டின் முதல்நாள் கூட்டத்தில் வரலாற்றில் நிகழாத சம்பவங்கள் பல இன்று நடந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் உரையில் சில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'அசிங்கப்படுத்துகிறீர்கள்..' இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையின் வெளியே பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. ஆளுநர் உரையை தயாரித்து அதை ஆளுநரிடம் வழங்கி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆளுநர் அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை பேசுவார். ஆனால் ஆளுநர் நீங்கள் நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை, உங்கள் சித்தாந்தை ஆளுநர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது நீங்கள் திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு ஆளுநரை அவமதித்துள்ளீர்கள். ஆளுநரை அசிங்கப்படுத்துகிறீர்கள். ஆளுநரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x