“இது திமுக கூட்டம் அல்ல” - ஆளுநர் உரையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகள் குறித்து அண்ணாமலை ஆவேசம்

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "உண்மைக்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் உரையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அது ஒன்றும் திமுகவின் கட்சிக் கூட்டம் அல்ல" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவையில், திமுக அரசு தனது அற்பமான அரசியல் ஆதாயத்திற்காக அதன் கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு ஆளுநர் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் மூலம், அவைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் இன்று தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாகவே திமுக கூட்டணிக் கட்சியினர் போராடத் தயராகிவிட்டனர். உண்மைக்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஒரு மாநிலத்தின் ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது.

திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க நடந்தது ஒன்றும் திமுகவின் கட்சிக் கூட்ட நிகழ்ச்சி அல்ல. பெட்ரோல் குண்டுவீச்சு, தற்கொலைப் படைத் தாக்குதல் தமிழகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்க, சட்டத்தைப் பாதுகாக்க தவறிய திமுக அரசு, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரான அப்பாவு, சட்டசபையில் நடுநிலையைக் காக்கத் தவறிவிட்டார். ஆளுநர் உரையின்போது குறுக்கிட்டு, ஆளுநரின் உரை சட்டசபைக் குறிப்பில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியது தவறானது.

கடந்த காலங்களில் ஆளுநர் பதவி என்பது வாய்மூடியபடி வெறும் பார்வையாளராகவே இருந்துவந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அரசியல் சாசனப் பொறுப்பை நிறைவேற்றியிருப்பதை திமுகவால் ஜீரணித்துக்கொள்ள முடியாததால், அவரை கொச்சைப்படுத்துகின்றனர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in