Published : 07 Jan 2023 07:02 AM
Last Updated : 07 Jan 2023 07:02 AM

விருத்தாசலம் | என்எல்சிக்கு நிலம் வழங்கும் குடும்பத்தில் டிப்ளமோ, ஐடிஐ படித்த 500 பேருக்கு நிரந்தர வேலை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

விருத்தாசலம்: என்எல்சிக்கான நிலம் எடுப்பு தொடர்பாக வடலூரில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:

உயர்த்தப்பட்ட குறைந்தபட்சம் சரியீட்டுத் தொகை ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு கொடுத்த உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.72 லட்சம் வரை, அதாவது நில மதிப்பு, வேலைவாய்ப்புக்கான ஒரு முறை பணப்பலன், வீட்டின் மதிப்புத் தொகை மற்றும் இதர மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான பணப்பலன் உள்ளிட்டவை சேர்த்து ஒட்டுமொத்த பணப் பலன்களாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு சரியீட்டுத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.15லட்சம் என முன்னர் நிர்ணயம் செய்யப்பட்டப்படி, தற்போது தமிழ்நாடு அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் என நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி கீழ்பாதி, வளையமாதேவி மேல்பாதி ஆகிய கிராமங்களில் 548 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 280 நபர்களுக்கு ரூ.15.68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் சமூக பொறுப்புணர்வுக்கான நடவடிக்கைகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய என்எல்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நிலம் கொடுத்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவர் என்ற நியதியில் 1,000 நபர்களுக்கு ஒப்பந்தமுறை பணி வழங்கப்படும்.

நிலம் கொடுக்கும் உரிமையாளர்களின் குடும்பத்தில் உள்ள டிப்ளமோ, ஐடிஐ முடித்த இளைஞர்களுக்கு தொழிற்கல்விக்கான பயிற்சிகள் 3 ஆண்டுகள் வழங்கிசுமார் 500 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அடுத்த 4 ஆண்டுகளில் வழங்க வழிவகை செய்யப்படும். என்எல்சி நிர்வாகம் சார்பில் மக்கள் குறைத்தீர் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x