Published : 06 Jan 2023 11:45 PM
Last Updated : 06 Jan 2023 11:45 PM

மின்விசிறி, நீச்சல் குளம், இன்னும் பல வசதிகள்... ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பிரம்மாண்ட ‘பயிற்சி மையம்’ கட்டும் மதுரைக்காரர்

மதுரை: மதுரை அருகே 20 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் வழக்கறிஞர் ஒருவர், அந்த காளைகளை பராமரித்து பயிற்சி வழங்க ஒரு ஏக்கரில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் நீச்சல் குளத்துடன் கூடிய பிரமாண்ட ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் கட்டி வருகிறார். ஒரு வாரத்தில் இந்த கட்டுமானம் முடியும்நிலையில் மாட்டுப்பொங்கல் அன்று, இந்த கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ்பெற்றது. காளைகள் வளர்ப்பதிலும், மாடுபிடி வீரராகி காளைகளை அடக்குவதிலும் மதுரை இளைஞர்கள் கொண்டுள்ள ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். குழந்தைகளை போல் பாசமாக அரவணைத்து வளர்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை தவிர வேறு எந்த வேலைகளுக்கும் இந்த காளைகளை பயன்படுத்தமாட்டார்கள். அதனாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக திகழ்கிறது.

பல லட்சம் ரூபாய் முதலீட்டில் காளைகளை வாங்கி ஆண்டு முழுவதும் அதற்கு பிரத்தியேக உணவுகள் வழங்கி, பராமரித்து பயிற்சிகள் வழங்கி பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மட்டும் அதனை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதை பெருமையாக கருதுகிறார்கள். இப்படி ஒரு விளையாட்டிற்காக எந்த வருமான நோக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் காளைகளை தயார் செய்கிறார்கள்.

பொருளாதார நிலையை தாண்டி இன்றைய அவசர வாழ்க்கையில் ஒரு காளை வளர்ப்பதே சிரமமான சூழலில் மதுரை அருகே குலமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.எம். திருப்பதி 20 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறார். தற்போது அவர், இந்த காளைகளை பராமரிக்கவும், அவைகளுக்கு பயிற்சி வழங்கவும் ஒரு ஏக்கரில் பிரத்யேக வசதிகள் கொண்ட நீச்சல் குளத்துடன் கூடிய ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தை கட்டி வருகிறார். வரும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த மையத்தை திறக்க உள்ளார். அதற்காக இரவு, பகலாக ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் கே.எம்.திருப்பதி கூறுயில், ‘‘எங்க தாத்தா, அப்பா காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கிறோம். ஜல்லிக்கட்டு எங்க ரத்தத்தில் ஊறிப்போன ஒரு விஷயம். அச்சம்பட்டி ஜல்லிக்கட்டில் எங்க பெரியப்பா லட்சுமணன், ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்தார். அப்போது நானும் கூட இருந்தேன். ஆனாலும், நாங்கள் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதையும், இந்த விளையாட்தையும் கைவிடவில்லை. தலைமுறைகளை தாண்டி இந்த விளையாட்டை நேசிக்கிறோம். அதை இந்த காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தவே, இந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தை கட்டுகிறேன்.

ஒவ்வொரு காளைகளையும் பராமரிக்க தனித்தனி இடம், காளைக்கு மேலே மின்விசிறிகள், நீச்சல் பயிற்சிக்கு பிரமாண்ட நீச்சல் குளம், மண்ணை குத்தவிடுவதற்கு பிரத்தியேக வசதி, காளைகளுக்கு சிகிச்சை வழங்க மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த ஜல்லிக்கட்டு மையத்தில் அமைகிறது. எங்க ஊரில் எல்லோர் வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதுதான் பெருமை. மற்ற செல்வங்களெல்லாம் இரண்டாவதுதான். ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒவ்வொரு ஊரின் பெயரையும், அந்த ஊரின் ஜல்லிக்கட்டு காளைகளையும் சொல்லி வாடிவாசலில் அவிழ்க்கும்போது கிடைக்கும் பெருமிதத்திற்கு அளவே இருக்காது.

வழக்கறிஞர் கே.எம்.திருப்பதி

அதுபோன்ற பெருமையும், சிறப்பும் எங்க ஊருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறேன். காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர், புலிக்குளம், தஞ்சாவூர் குட்டை போன்று என்னிடம் உள்ள அனைத்து காளைகளும் நாட்டினம் காளைகள்தான். விவசாயமும் செய்வதால் காளைகளுக்கான வைகோல், இரும்பு சோளம் என்னுடைய நிலத்திலே விளைவித்து கொடுக்கிறேன். இதுதவிர, கானப்பயிர், பேரீச்சை, பருத்திக் கொட்டை, வேர்கடலை பொடி போன்ற பிரத்யேக உணவுகளைதான் என்னுடைய காளைகளுக்கு கொடுக்கிறேன். ஒரு காளைக்கான ஒரு நாள் உணவு மற்றும் பராமரிப்பிற்காக ரூ.400 செலவாகிறது. 20 காளைகளுக்கு இப்படி மாதம் பல ஆயிரம் செலவு செய்கிறோம். காளை வளர்ப்பை ஒரு தொழிலாக நாங்கள் செய்யவில்லை. ஆர்வம் காரணமாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x