Published : 05 Jan 2023 07:26 PM
Last Updated : 05 Jan 2023 07:26 PM

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை

புதுடெல்லி: "மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர், அவரது இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த கட்சியினருடைய நிலைப்பாடு. ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவிக்கு வர நினைத்தார்" என்று ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், "ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓராண்டுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை தேவைப்பட்டிருக்காது.

ஆனால், அப்போது அதனை செய்யாத எடப்பாடி பழனிச்சாமி தற்போது புதிய பதவிகளை உருவாக்கி, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதன்மீது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து முடிவு எடுக்கலாம் என்றுதான் கட்சி விதிமுறை கூறுகிறது.

மேலும், ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்று ஏற்கெனவே அதிமுக விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அந்த விதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செயல்பட்டுள்ளனர். ஜெயலலலிதா மரணத்துக்கு பின்னர் திருத்தப்பட்ட கட்சி விதிபடி, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதே நிர்வாக பதவி. அதற்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள். கட்சியின் எந்த முடிவையும் இருவரும் இணைந்துதான் எடுக்க வேண்டும் என்பது விதி.

கட்சியின் தலைமை அலுவலகம், தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அது செல்லத்தக்கது.கட்சியின் அசையும், அசையா சொத்துக்கள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் இந்த இரு பதவியில் இருப்பவர்களும் இணைந்து அதிகாரம் செலுத்தக் கூடியது. எனவே பொதுக்குழு மூலம் அந்த பதவிகளை ரத்து செய்துவிட்டு, புதிய பதவியை உருவாக்க முடியாது.

அதிமுகவில் தேர்தல் மூலம் அதுவும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. எனவே, கட்சியில் தற்போது இல்லாத அந்த பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர், அவரது இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த கட்சியினருடைய நிலைப்பாடு.ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவிக்கு வர நினைத்தார். அவ்வாறு வர நினைப்பவர், நியாயமான முறையில் அதற்கான தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

மாறாக, கட்சித் தலைமை அலுவலக பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வரக்கூடாது என தனக்கு சாதகமான வகையில் விதிகளை மாற்றியுள்ளார். அவசரகதியில், எடப்பாடி தரப்பினர் விதிமுறைகளை மாற்றியதால், இதனால் கட்சியின் செயல்பாடுகள், தொண்டர்களின் மனநிலை, கட்சியின் எதிர்காலம் என அனைத்தும் பாதிக்கபட்டுள்ளது.

ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கும் அதிமுகவில் வெறும் 2500 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிக்கு முடியும்?” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.6) தள்ளிவைத்தார். நாளைய தினமே அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x