Last Updated : 05 Jan, 2023 10:42 AM

 

Published : 05 Jan 2023 10:42 AM
Last Updated : 05 Jan 2023 10:42 AM

மார்கழி ஆருத்ரா தரிசனம் | சிதம்பரம் நடராஜர் கோயில் தேர்திருவிழா கோலாகலம்

கடலூர்: மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

சைவத் திருத்தலங்களில் முதன்மை பெற்றதும், உலகப் புகழ்பெற்றதுமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆனித் திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் வெளிநாட்டு, வெளிமாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. கடந்த 1ம் தேதி தெருவடைச்சானும் (சப்பரம்), 4ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (ஜன.5) காலை நடைபெற்றது. தேரோட்டம் தொடங்கியபோது லேசான மழை பெய்தது.

தேரோட்டத்திற்கு முன்னதாக அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு ஆராதனைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சித் சபையில் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் மேலதாளம் முழங்க, தேவாரம் திருவாசகம் பாடிட தனித் தனி தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேரில் எழுந்தருளினார்.

பக்தர்கள் சிவ சிவா என்ற முழக்கத்துடன் தேர்களின் வடங்களைப் பிடித்து இழுத்தனர். 5 தேர்களும் கீழ வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மாலை 6 மணி அளவில் நிலையை அடையும். ஒவ்வொரு வீதிகளிலும் உபயதாரர்கள் மண்டகப்படி செய்வர். தேர்களுக்கு முன்னால் பெண்கள் மாக்கோலம் இட்டபடி சென்றனர். சிவனடியார்கள் மேளதாளம் முழங்கிட சிவ நடனம் ஆடியபடி சென்றனர். சிவனடியார்கள் தேவாரம் திருவாசகம் பாடியபடி சென்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு, சிதம்பரம் ஏ எஸ் பி ரகுபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிதம்பரம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. பெண் போலீசார் தேரோடும் பகுதி மற்றும் கோயில் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நின்று கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு அவர்கள் அணிந்து வரும் நகையை ஊக்கு போட்டு ஜாக்கெட்டுடன் இணைத்து பாதுகாப்பாக செல்லும் படி அறிவுறுத்தினார்.

தேர் திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குவிந்துள்ளனர். முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா நாளை (ஜனவரி 6ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x