Published : 03 Jan 2023 01:39 PM
Last Updated : 03 Jan 2023 01:39 PM

“அதிமுக வீழ்ந்தபோது உயிர் கொடுத்தது பாமகதான்” - ஜெயக்குமாருக்கு கே.பாலு பதிலடி

பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலுவின் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: “அதிமுக வீழ்ந்தபோது எல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும்" என்று பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தெரிவித்தார்.

பாமக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “அதிமுக நான்காக உடைந்துள்ளது” என்று தெரிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவால்தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்துள்ளது என்பதை மனதில் வைத்துப் பேசவேண்டும். அதிமுக தயவு இல்லையென்றால், பாமக என்ற கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரமே கிடைத்திருக்காது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளியில் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "1996-ல் நான்கு எம்எல்ஏக்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில், அப்போது பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பற்றி பேசி 1999 தேர்தலைச் சந்தித்தார். அதிமுக விழும்போது எல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்கு பாமகதான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.

மைனாரிட்டி திமுக என அதிமுகவால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்த பாமக, கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என சொல்லியதில்லை. பாமகவிற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யார்? நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.

அதிமுக கருத்தைதான் ஜெயக்குமார் கூறினாரா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்ந்ததற்கும், ஜெயகுமார் அமைச்சராக நீடித்ததற்கும் நாங்கள்தான் காரணம் என்பதை எப்போதும் சொல்லியதில்லை. அதிமுக வீழ்ந்தபோது எல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x