Last Updated : 02 Jan, 2023 06:57 PM

 

Published : 02 Jan 2023 06:57 PM
Last Updated : 02 Jan 2023 06:57 PM

தமிழகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் முதலிடம்: மதுரை காவல் துறை பெருமிதம்

மதுரை: ஓராண்டில் கண்காணிப்புப் பட்டியலில் 3774 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், நன்னடத்தையை மீறிய 122 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள மதுரை காவல் துறை, குற்றத் தடுப்பு நடவடிக்கையில் மதுரை முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.

மதுரை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க, பல நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற் கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக மாநகர காவல் நிலையங்களில் புகார்தாரர்களை காவல் துறையினர் கையாளும் விதம் மற்றும் புகார்களுக்கு துரிதத் தீர்வு காணும் நோக்கில் காவல் நிலையங்கள் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், வைகை ஆற்றுக்கு தெற்கு பகுதியில் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில், சந்திப்புகள், சிலைகள், சோதனைச் சாவடிகளும் கண்காணிப்புக்குள் வந்துள்ளன. இதற்கிடையில், வழக்குகளில் சிக்கிய நபர்களின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் முன் எச்சரிக்கையாக சந்தேக நபர்கள் ( சட்டப் பிரிவு -107) திரும்ப, திரும்ப குற்றச் செயலில் ஈடுபடுவோர் (110), ஒரு சில வழக்குகளில் சிக்கியோர் (109) என, மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு, நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.

இதன்படி, மாநகரில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வழக்கில் சிக்கிய நபர்கள் மீண்டும் குற்றச் செயல் புரிய வாய்ப்புள்ளது என சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் நினைத்தால் மூன்று பிரிவில் வழக்கு, நன்னடத்தை பத்திரம் 2 சாட்சிகளுடன் சுமார் 2 ஆண்டுக்கும் பத்திரம் எழுதி வாங்கலாம். இதன்பின், சம்பந்தப்பட்ட நபர்கள் ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால் அவர் 2 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர். ஜாமீனில் வர முடியாது.

மதுரை நகரில் கடந்த ஆண்டில் 107- பிரிவில் 477, 109-ல் 971, 110-ல் 2295 என, 3744 பேர் கண்காணிக்கப்படுவோர் பட்டியலுக்கு கொண்டு வந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் குற்றச் செயலில் ஈடுபட மாட்டோம் என, மூன்று பிரிவிலும் 2047 நபர்கள் நன்னடத்தை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். நன்னடத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, மீறிய 122 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எப்போது, நன்னடத்தையை மீறினார்களோ அந்த நாளில் இருந்து 2 ஆண்டுக்கு வெளியில் சிறையில் அடைக்கப்படுவர். இது போன்ற நடவடிக்கையால் குற்றச் செயல்கள் குறைந்து இருப்பதாக நகர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து துணை ஆணையர் சீனிவாச பெருமாள் கூறியது: ''சட்டம், ஒழுங்கு- குற்றச் செயல்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும், 107, 109, 110 பிரிவுகளில் எடுத்த தீவிர முன்எச்சரிக்கையால் வெகுவாக குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஓராண்டில் இந்த மூன்று பிரிவுகளில் வழக்கு, நன்னடத்தை பத்திரம், கைது நடவடிக்கை என்பது மாநில அளவில் மதுரை மாநகர முதலிடத்தில் இருப்பது தெரிகிறது. இது தொடரவேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x