Published : 02 Jan 2023 04:35 AM
Last Updated : 02 Jan 2023 04:35 AM

குந்தா நீரேற்று மின் திட்ட பணியில் சுணக்கம்: மழையால் தாமதமாகிய முதல் பிரிவு உற்பத்தி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று மின்திட்டத்தின் முதல் பிரிவு மின் உற்பத்தி காலதாமதமாகி வருகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து தமிழகத்தை மின்மிகை மாநிலமாக தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அந்த வகையில், எரிசக்தி துறை சார்பில், உதகை அருகே காட்டுக் குப்பை பகுதியில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் (125x4 அலகுகள்) குந்தா நீரேற்று புனல்மின் திட்டத்துக்கான பணி, 2018-ம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டன. 2021-2022-ம் ஆண்டில் இத்திட்டப் பணிகள் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் நாளொன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உடையது. அதனால், ஆண்டுக்கு சுமார் 1095 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக கிடைக்கும் என மின்வாரியம் தெரிவித்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக,2,200 மீட்டருக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சுமார் 90 % நிறைவடைந்துள்ளது.

இப்பணிக்கான நவீன கட்டுமானப் பொருட்கள், பெரும்பாலும் வெளிநாடு, பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. மும்பை, குஜராத் உள்ளிட்டபகுதிகளிலிருந்து தனியார் பொறியாளர்கள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு,பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்தாண்டு பெய்த தொடர் மழையால், கட்டுமானப் பொருட்கள் எடுத்து வருவதிலும், ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.

முதல் பிரிவான 125 மெகா வாட் திட்டப் பணியை, கடந்தாண்டு இறுதிக்குள் முடித்து மின் உற்பத்தியை தொடங்க மின்வாரியம் திட்டமிட்டது. ஆனால், அது சாத்தியப்படவில்லை.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "கரோனா காலத்தில் ஏற்பட்ட தாமதம், கடந்த 2 ஆண்டுகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் குறிப்பிட்ட நாட்களில் கட்டுமானப் பணி முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்தாண்டு முடிக்க வேண்டிய முதல் பிரிவுக்கான பணியை, இந்தாண்டு முடிக்க திட்டமிட்டுள்ளோம்"என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x